சனாதன ஒழிப்பு மாநாடு
2023 செப்டம்பர் 2, காமராசர் அரங்கம், சென்னை
தீர்மானங்கள்
1. மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் பாகுபடுத்தும் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டை தொகுத்தெழுதிய மநுவின் சிலை ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வாய வளாகத்தில் 1989ஆம் ஆண்டு முதல் இருப்பது அரசியல் சட்டத்தின் மாண்புகளுக்கு விரோதமானது. எனவே அதை உடனடியாக அகற்ற வேண்டும்.
2. அரசியல் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக இயங்க வேண்டியவையே அரசு அலுவலகங்கள். எனவே அனைத்துவழிகளிலும் மதச்சார்பின்மையைக் கடைபிடிப்பது அவசியம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதுகுறித்து தெளிவான அரசாணைகள் இருந்தும் அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, பூமி பூசை, புதிய கட்டிடத் திறப்புக்கு புண்ணியார்த்தனம், யாகங்கள், வார இறுதிப் பூசை, விநாயகர் சதுர்த்தி போன்ற ஒரு மதத்தின் சார்பான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இப்படியான பூசைகள் மூலம் பார்ப்பனியச் சடங்குகளின் பிடியில் அரசு அலுவலகங்கள் சிக்குண்டு கிடக்கின்றன. பெரும்பான்மையாக உள்ளவர்களின் மத நடவடிக்கைகள் இயல்பானவை என்கிற நிலையை உருவாக்குவது அரசியல் சட்டம் உயர்த்திப்பிடிக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானது. எனவே இத்தகைய நடவடிக்கைகள் உடனடியாக தடுக்கப்படவேண்டும்.
3. அரசு அலுவலக வளாகங்களுக்குள் எந்தவொரு குறிப்பிட்ட மதம் சார்ந்த வழிபாட்டிடத்தையும் அரசு அலுவலகம் நிர்வாகிக்கக் கூடாது. புதியதாக எந்தவொரு வழிப்பாட்டுத்தலம் அமைப்பதையும் அனுமதிக்கக்கூடாது.
4. இறை நம்பிக்கை, மத ஈடுபாடு என்பவை குடிமக்களின் தனிப்பட்ட விருப்பம். அரசைப் பொறுத்தவரை மதச்சார்பற்றது. எனவே, மதம் சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அமைச்சர்களோ அரசு அலுவலர்களோ ஊழியர்களோ அவர்களுடைய பணிசார்நிலையில் கலந்து கொள்ளக்கூடாது. அனைத்து மக்களுக்குமான இவர்கள் தமது சொந்த சாதி அமைப்புகளின் நிகழ்வுகளில் பங்கெடுப்படுப்பதும் கூடாது.
5. வாழ்விடங்களும் வழிபாட்டிடங்களும் சாதி அடிப்படையில் பிரிந்திருப்பதைப் போலவே மயானங்களும் பிரிந்திருக்கின்றன. இந்தப் பிரிவினையின் காரணமாக சமரசம் உலாவும் இடம் எனச் சொல்லப்படும் மயானங்களிலேயே கடும் மோதல்கள் உருவாகின்றன. இந்நிலையைத் தவிர்க்க எல்லா ஊர்களிலும் பொது மயானம் அமைக்கப்பட வேண்டும். ஒரு ஊர் ஒரே சுடுகாடு/ இடுகாடு என்கிற நிலை எட்டப்பட வேண்டும். அதற்கான மன ஏற்பை வளர்க்க மக்களிடையே பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும்.
6. சனாதனத்தின் கோரவடிவமான சாதியம் நீடித்திருப்பதன்
முதன்மைக் காரணியாக இருப்பது அகமணமுறையாகும். நாட்டில் சாதி கலப்புத் திருமணம்
மிகக்குறைவாக நடக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு இருப்பது கவலையளிக்கக்
கூடியதாகும். சாதிய அமைப்புகள் தம் சாதி இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் வேறு
சாதியினரை திருமணாம் செய்துகொள்ளமாட்டேன் என்று கோவிலில் வைத்து வெற்றிலைச்
சத்தியம் வாங்குவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வாழ்க்கைத்துணையை சுதந்திரமாக
தேர்ந்தெடுக்கும் உரிமையை தடுத்துவருகின்றன. சாதியாணவக்கொலைகள் மூலம் சாதி
கலப்ப்பு/ மறுப்புத் திருமணத்தின் மீது அச்சம் உருவாக்கப்படுகிறது.
அகமண முறையை விட்டுவிடுதலையாகி வெளியேற விரும்புவோர் கைக்கொள்ளும்
நடைமுறைதான் சாதிமறுப்புத் திருமணம். இதனைப் பெற்றோரும் உறவினர்களும்
எதிர்ப்பது மட்டுமின்றி வாடகைக்கு வீடுதர மறுப்பது உட்பட பல வகையில்
புறக்கணிக்கும் நிலை உள்ளது. திருமணப் பதிவிலும் ஏராளமான இடையூறுகள், கடுமைகள். இவையெல்லாம் சாதியத்தைக் கெட்டிப்படுத்துவற்கான திட்டங்களே.
எனவே, சாதி, மத மறுப்புத் திருமணம் செய்துகொள்வோரின் அச்சம் அகற்றும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அரசே காதலர் புகலிடங்களை உருவாக்க வேண்டும். அவர்களை சாதி/சமய மறுப்பாளர் என அறிவித்து அவர்களின் குழந்தைகளுக்குக் கட்டாய, கட்டணமில்லா கல்வி வழங்கி வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
7. குடும்பங்களில் தான் அதிகமும் பார்ப்பனியச் சடங்குகள் நடக்கின்றன. குடும்பங்களில் உரையாடி இச்சடங்குகளை நிறுத்தினாலே பார்ப்பனியத்தின் உயிர்நாடியான சடங்குகள் அழிந்துவிடும்.
8. பார்ப்பனியச் சடங்குகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு வாழ்க்கை நெறிகளையும் கொண்டாட்டங்களையும் உருவாக்குவதற்கு தமிழர் பண்பாட்டில் தோய்ந்த வல்லுநர் குழு அமைக்கப்பட வேண்டும்.
9. பெயர் சூட்டும் விழா பொதுவாக பார்ப்பனச்சடங்குகளின்றியே நடைபெறுகிறது என்றாலும் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருத மயமாக மாறிக்கொண்டு இருக்கின்றன. தமிழ்ப்பெயர்களைச் சூட்ட வேண்டும்.
10. புதுமனை புகுவிழாக்களில் நடக்கும் கணபதி ஹோமம் என்ற பார்ப்பனச் சடங்கு வீட்டின் தீட்டைக் கழிக்கும் சடங்கு அனைத்து சாதியினரும் சேர்ந்து கட்டிய வீடு தீட்டுப்பட்டது என்று அந்த தீட்டை கழிக்கும் சடங்காகவே, புனிதப்படுத்தும் சடங்காகவே நடக்கிறது என்பதால் அந்த சடங்கைத் தவிர்த்து புதுமனை திறப்பு விழா என்று நடத்தலாம்.
11. பூப்புனித நீராட்டு விழா என்ற சடங்கினை நடத்த நடத்த வேண்டிய அவசியமே இல்லை. பெண்குழந்தைகள் பருவமடைவதை தீட்டாகப் பார்த்து தீட்டு கழிக்கும் இந்தப் பார்ப்பனியச் சடங்கினை கைவிட வேண்டும்.
12. இறப்புச்
சடங்குகள் முழுக்கவும் இறப்பு என்கிற இயற்கை நிகழ்வை தீட்டு எனக் கருதி
பார்ப்பனியச் சடங்கினால் புனிதப்படுத்தப்படுவதாக நடக்கின்றன. மரணம் தீட்டானதல்ல
என்றும் உடல் தானம் செய்வதை ஊக்கப்படுத்தியும் பரப்புரை மேற்கொள்வதன் மூலம்,
இந்தச் சடங்குகளில் பெரும்பாலனவற்றை தவிர்க்க முடியும்.