இலச்சினை வரையும் போட்டி
சனாதன தர்மம் என்பது இந்தியாவில் குடியேறிய ஆரியர்களுக்குரியது; அது நான்கு வேதங்கள், நான்கு ஸ்மிருதிகள், இரண்டு இதிகாசங்கள், பதினெட்டு புராணங்கள் ஆகியவற்றில் தனிநபர், குடும்பம், சமூகம் சார்ந்து சொல்லப்பட்டுள்ள சட்டங்கள், ஒழுங்குகள், மதிப்பீடுகள், கடமைகள் ஆகியவற்றைப் பின்பற்றி வாழும்படி வற்புறுத்துகிறது. இதற்கேற்ப புனையப்பட்ட உயர்வுXதாழ்வு, புனிதம்Xதீட்டு எனும் கற்பிதங்கள் வழியே சமூகத்தைக் கூறுபோட்டு ஒருவரையொருவர் சமமற்ற விதமாக நடத்துவதற்குரிய வழிமுறைகளையும்- அவற்றை மீறுவோரை ஒடுக்குவற்கான தண்டனைகளையும் கொண்ட கொடிய சட்டத்தொகுப்பான சனாதன தர்மம், பின்னாளில் இந்தியர்கள் அனைவர் மீதும் திணிக்கப்பட்டு இன்றளவும் நீடிக்கிறது.
எல்லாவகையான பாகுபாடுகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் அடிப்படையான சனாதனத்தை எதிர்த்து வரலாறு நெடுகிலும் நடைபெற்றுவரும் போராட்டங்களால் தான் இந்தியச்சமூகம் சமத்துவத்திற்கான பாதையில் ஓரளவேனும் முன்னேறிக் கொண்டிருக்கிறது. வரவேற்கத்தக்க இம்முன்னேற்றம் தொடரவேண்டுமானால், சனாதனம் எவ்வடிவில் வெளிப்பட்டாலும் அதனை முறியடிக்க வேண்டியது அவசியமாகிறது.
சனாதனம் என்கிற சொல்லையே அறிந்திராதவர்கள் மனதில்கூட சனாதனம் பரப்பியுள்ள நச்சுக்கருத்தியல் ஊடுருவியுள்ள ஆபத்தை உணர்ந்துள்ள தமுஎகச, அவர்களை மனித நிலைக்கு மீட்பதை தனது பணிகளில் ஒன்றாக கருதுகிறது. அதன்பொருட்டு, சனாதன ஒழிப்பு மாநாட்டினை சென்னையில் 2023 ஆகஸ்டில் நடத்தவுள்ளது. இம்மாநாட்டின் கருத்தியலை கலைநேர்த்தியுடன் வெளிப்படுத்தும் “இலச்சினை”யை வரைந்தளிக்கும் போட்டியில் பங்கெடுக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறது தமுஎகச.
தெரிவாகும் சிறந்த இலச்சினை, மாநாட்டிற்கான அனைத்து விளம்பரங்களிலும் செய்திகளிலும் பயன்படுத்தப்படும். பரிசுத்தொகை ரூ.10,000/ (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) மாநாட்டில் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
இலச்சினையை 20.06.2023 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamueakasa2014@gmail.com
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
08.06.2023