தமுஎகச அஞ்சலி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவர்களில் ஒருவரும், நிதர்சனா நாடகக்குழுவின் இயக்குநரும் நடிகருமான தோழர் சி.காளிதாஸ் அவர்களது மறைவுக்கு தமுஎகச மாநிலக்குழு தனது அஞ்சலியை உரித்தாக்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், பள்ளிகொண்டாப்பட்டு கிராத்தில் 09.07.1954 அன்று பிறந்த காளிதாஸ், சிறுவயது முதலே மக்கள் பணிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமுஎகச, அரசு ஊழியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டுவந்தார்.
1980களின் தொடக்கத்தில் பழைய வடாற்காடு மாவட்ட கிராமங்கள்தோறும் மக்களின் பாடுகளை நாடகங்களாக வடிவமைத்து உயிர்ப்புடன் வெளிப்படுத்தியவர். தமுஎகச போளூர் கிளையை உருவாக்கி மாதந்தோறும் நாடகங்களையும் கலை இலக்கிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார். திருவண்ணாமலை தமுஎகச நிகழ்வுகள் அனைத்திலும் மிகுந்த உற்சாகத்துடன் தொடர்ந்து இயங்கிவந்தார்.
தோழர் சி.காளிதாஸ் நாடகங்களை நடத்துவதும் நடிப்பதுமென்றால் தன்னுடைய சொந்த வேலைகளைத் துறந்துவிட்டு முழுமூச்சாக களமிறங்கிவிடுவார். வெண்மணிப் படுகொலையை மையப்படுத்தி அவர் தயாரித்த ராமைய்யாவின் குடிசை நாடகம் குறிப்பிடத்தகுந்ததாகும். ஒவ்வொரு சட்டமன்ற பாராளுமன்ற தேர்தலின்போதும் அரசியல் நாடகங்களைத் தயாரித்து கிராமந்தோறும் சென்று நடத்துவார். அறிவொளி இயக்கத்தில் முனைப்புடன் செயல்பட்ட அவர் மாவட்ட அளவிலான கலைக்குழு ஒருங்கிணைப்பாளராக பல கலைக்குழுக்களுக்கு பயிற்சியளித்தார்.
காளிதாஸ் சமீபகாலமாக திரைப்படங்களிலும் நடித்துவந்தார். அவர் நடித்த லிட்டில் விங்க்ஸ் குறும்படம், கோவா திரைப்பட விழாவில் சிறந்த குறும்படமாக தேர்வாகியுள்ளது. நடிப்பின் மீது தீராவேட்கை கொண்டிருந்த தோழர் காளிதாஸ், திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த இடத்திலேய நேற்று மரணத்தைத் தழுவியுள்ளார். கலை இலக்கியத்திற்காகவும் அமைப்பின் வளர்ச்சிக்காகவும் தோழர் சி.காளிதாஸ் அவர்கள் ஆற்றிய பணி என்றென்றும் நினைவுகூரப்படும். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாரின் துயரில் தமுஎகச பங்கெடுக்கிறது.
தோழமையுடன்,
மதுக்கூர்இராமலிங்கம், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்