2023 ஏப்ரல் 29, 30 ஏற்காடு
2023 ஏப்ரல் 29,30 தேதிகளில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற தமுஎகச மாநிலக்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானங்கள்:
இந்தியாவில் சமூக மாற்றத்திற்கான
போராட்டத்தின் முன்னோடி சிங்காரவேலரின் பெயரில் இந்த ஆண்டு மே தினத்தைக் கொண்டாடுக!
இந்தியாவில் முதன்முதலில் மேதினம் கொண்டாடியப் பெருமை சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரை சாரும். உலகத் தொழிலாளர்களின் உன்னத நாளான மே தினத்தன்று (1923ஆம் ஆண்டு) ”இந்திய தொழிலாளர், விவசாயக் கட்சி” தொடங்கிச் சென்னையில் தொழிலாளர்கள் மத்தியில் செங்கொடியை ஏற்றினார். ஆசியாவிலேயே முதன்முதலில் கொண்டாடப்பட்ட மே தினமாகவும் இந்நிகழ்வை குறிப்பிடுகின்றனர். இவ்வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வின் நூற்றாண்டு இந்த ஆண்டு நிறைவடைகிறது.
மேதினம் கொண்டாடியது மட்டுமல்லாது, இந்திய பொதுவுடமை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகவும், சுரண்டலுக்கு எதிராகப் பட்டாளி வர்க்கத்தை அணிதிரட்ட தொழிற்சங்கம், கட்சி தொடங்கி நடத்தியவர் சிங்காரவேலர். வர்க்கச் சுரண்டலுக்கு எதிராக மட்டுமல்லாமல் வர்ண ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் களம் கண்டவர் சிங்காரவேலர். உழைக்கும் மக்களைச் சாதி, மத மூடநம்பிக்கைகளில் இருந்து விடுவிக்கத் தன் எழுத்தையும் பேச்சையும் பேராயுதமாகப் பயன்படுத்தியவர். ”அறியாமை இருளில் இருந்து வாழ்வை விடுவிக்க அறிவுப்பசிக் கொள்வோம்” என்று முழங்கியவர். நாளைய சமுதாயத்தை அறிவியல் மனப்பான்மையோடு உலகளாவிய அறிவியல் கண்டுபிடிப்புகளை எளிய தமிழில் குழந்தைகளும் வாசித்து அறியும் வண்ணம் புதுவுலகு இதழில் தொடர்ந்து எழுதவும் செய்தார். சமூக மாற்றத்திற்கான பாதையில் இப்படி பல முன்னோடி பங்களிப்புகளைச் செய்த சிங்காரவேலரின் தொண்டு உரியவகையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவேண்டும். அதன் தொடக்கமாக, இந்தியாவில் சமூக மாற்றத்திற்காகச் செயல்பட்ட முன்னோடியான சிங்காரவேலரின் பெயரில் இந்த ஆண்டு மே தினத்தை தமுஎகச கொண்டாடுகிறது.
கள்ளர் சீரமைப்பு, பழங்குடி மற்றும் ஆதி திராவிடர் நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித்துறையோடு இணைப்பதை தமிழ்நாடு அரசு கைவிடுக!
பள்ளிகள் இணைப்பு என்பது தேசியக்கல்விக்கொள்கை அமுலாக்கத்துக்கு
இசைவான பள்ளிக் கட்டமைப்பைத் தயார் செய்யும் செயல்பாடாகவே உள்ளது. இச்சிறப்பு
பள்ளி நிர்வாகங்களில் உள்ள நிர்வாகச் சீர்கேட்டைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்ய
வேண்டுமே தவிர இணைப்பது தீர்வாகாது. இப்பள்ளிகளில் நடைமுறையில் இருந்து பறிபோன பல்வேறு
சிறப்புத் திட்டங்களை மீண்டும் மீட்டெடுத்து தனித்தன்மையுடன் செயல்பட தமிழ்நாடு
அரசை த.மு.எ.க.ச. வலியுறுத்துகிறது.
நூலக ஆணைக்குழுவின் செயல்பாட்டில்
மாற்றம் தேவை!
பொது நூலகங்களுக்கு 2018-19ஆம் ஆண்டு வெளியான நூல்கள் பதிப்பாளர்களிடமிருந்து நூலகத்துறையால் கொள்முதல் செய்யப்பட்டன. 2020-21,22ஆம் ஆண்டுகளில் வெளியான புதிய நூல்களுக்கு நூலக ஆணை வழங்குவதற்கு மாதிரிப்பிரதிகள் கூட இன்னமும் பெறப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி இறுதிக்குள் முந்தைய ஆண்டு வெளியான புத்தகங்களின் மாதிரிப்பிரதிகள் பெறப்படுவது வழக்கம். ஆனால் 2023 ஏப்ரல் நிறைவுற்றுவிட்ட இத்தருணத்தில் கூட கடந்த மூன்றாண்டுகளில் வெளியான புத்தகங்களின் மாதிரிப் பிரதிகள் பெறப்படவில்லை.
பெறப்பட்ட மாதிரிப்பிரதிகள் அனைத்திற்கும் நூலக ஆணை வழங்கப்படுவதில்லை. அதற்கென உருவாக்கப்பட்ட குழுதான் புத்தகங்களை தேர்வு செய்யும். ஆனால் பதிப்பாளர்களால் / எழுத்தாளர்களால் வழங்கப்படும் மாதிரிப் புத்தகங்களில் ஒவ்வொரு தலைப்பிலான புத்தகங்களை கீழ்கண்ட ஏழு நூலகங்களுக்கு அனுப்பிவிட்டு அதற்கான ரசீதுடன் தான் மாதிரிப் புத்தகத்தை சமர்ப்பிக்க முடியும். நூலக ஆணை கிடைப்பது கிடைக்காமல் போவது என்கிற விஷயத்தைக் கடந்து அந்தந்த ஆண்டுகளில் வெளியான புதிய எழுத்தாளர்களின் / பதிப்பாளர்களின் நூல்கள் இந்த ஏழு முக்கியமான நூலகங்களில் வாசிக்கக் கிடைக்கும்.
கன்னிமாரா பொது நூலகம் – சென்னை
ராஜாராம் மோகன் ராய் நூலகம் – கொல்கத்தா
பாராளுமன்ற நூலகம் – டில்லி
தமிழ்நாடு சட்டமன்ற நூலகம் – சென்னை
மும்பை நூலகம்
மதுரை தமிழ்ச்சங்க நூலகம்
பொது நூலகம் - டில்லி
கல்வியாளர்கள், பேராசியர்கள், ஆய்வாளர்கள் மட்டுமின்றி உலகளவில் வாழக்கூடிய தமிழ அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வருகை தரக்கூடிய நூலகங்கள் இவை. ஆனால் இந்நூலகங்களில், கடந்த மூன்று ஆண்டுகளில் வெளியான தமிழ் நூல்கள் இல்லை என்பது அறிவுத்துறைக்கு பெரும் இழுக்கு.
கடந்த ஆட்சியில் 2020ஆம் ஆண்டு நூல் கொள்முதலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யப்பட்து. ஆனால் இப்போது காகித்தின் விலை இன்னும் பல மடங்கு விலை உயர்ந்துள்ளது எனவே 2020-2021 மற்றும் 2022 ஆண்டிற்கான நூலக ஆணைக்கு புதிய விலை நிர்ணயம் செய்வதற்கு குழு அமைக்கப்பட வேண்டும்.
சிறார் / இளைஞர்களின் வாசிப்புத்திறனை மேம்படுத்த அவர்களுக்கான நூல்களை வாங்குவதற்கென தனிக் குழு அமைக்கப்பட வேண்டும்.
2006-2011 ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு புத்தகப் பதிப்பாளார்கள், விற்பனையாளர்கள் மற்றும் பணியாளார்கள் நலவாரியம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு பதிப்புத்துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு நல வாரியத்தின் பலன் கிடைக்கச் செய்ய வேண்டும்.
கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூல்கம், மாவட்ட மைய நூலகங்கள்,
கிளை நூல்கங்கள், நடமாடும் நூலகங்கள், ஊர்ப்புற நூல்கங்கள், பகுதி நேர நூலகங்கள் என
தமிழ்நாட்டில் மொத்தம் 4634 (நான்காயிரத்து அறுநூற்றி முப்பத்தி நான்கு) நூலகங்கள்
செயல்பாட்டில் உள்ளன. ஆனால் பொது நூலக இயக்ககம் 600 அல்லது 1000 பிரதிகள் மட்டுமே கொள்வனவு
செய்கிறது. 600 பிரதிகள் என்பதுதான் பரவலான கொள்வனவு. எனவே கூடுதல் எண்ணிக்கையில் புத்தகங்கள்
வாங்க வேண்டும்.
திரை ஒளிப்பட தணிக்கைச்சட்டத் திருத்த எதிர்ப்பு மாநாடு:
2021ஆம் ஆண்டு சட்டத்திருத்தத்திற்கான
முன்வரைவு அறிமுகம் செய்யப்பட்ட போதே தமுஎகச எதிர்ப்பு தெரிவித்தது. இணையவழியில் கண்டனக்கூட்டம்
ஒன்றையும் நடத்தியது. இப்போது சட்டத்திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள
நிலையில் மழைக்கால கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால்,
திரைப்படங்களைச் சட்டவிரோதமாக நகலெடுத்து திரையிடுவதைத் தடுப்பது, தணிக்கைச் சான்றிதழில்
வயதுவாரியாக மேலும் சில வகைமைகளை உருவாக்குவது என்பதற்காக இத்திருத்தம் என்பதாக முன்னிறுத்தப்படுகிறது.
ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பெற்று திரையிடப்பட்ட பிறகும் கூட ஒரு படத்தின் கருத்துகள்
நாட்டின் நலனுக்கு எதிராக இருப்பதாக அரசு கருதும்பட்சத்தில் மறுதணிக்கை செய்வதற்கு
இச்சட்டத்திருத்தம் அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. இது அப்பட்டமாக கருத்துரிமையை ஒடுக்குவதற்கே
வாய்ப்பளிக்கும். பல்லாண்டுகளுக்கு முன்பே வெளியான படங்கள் கூட தப்ப வழியில்லை என்கிற
அளவுக்கு மறுதணிக்கை நடக்குமானால் சமகாலத்தில் எடுக்கும் படங்கள் சுயதணிக்கை மனநிலையுடனே
எடுக்கப்படும் நெருக்கடி உருவாகும். எனவே இச்சட்டத்திருத்தத்தினை கைவிட வேண்டும் என்று
தமுஎகச ஒன்றிய அரசினை வலியுறுத்துகிறது. இதன்பொருட்டு சென்னையில் சிறப்பு மாநாடு ஒன்றை நடத்துவது என்று தமுஎகச மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
புத்தகக்கண்காட்சிகள்:
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமுஎகச வெளியிட்ட கலை இலக்கியச் சமூகத்தின் கோரிக்கை சாசனத்தில், தமிழ்நாடு அரசே மாவட்டத் தலைநகர்களில் புத்தகக்கண்காட்சிகளை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தோம். வேறு பல அமைப்புகளாலும் ஆளுமைகளாலும் இக்கோரிக்கை எழுப்பட்டது. இப்போது நடக்கிறது, வரவேற்கிறோம். முதல்முயற்சி என்கிற விதத்தில் காணப்படுகிற குறைபாடுகள் களையப்பட வேண்டும். குறிப்பாக, அந்தந்தப் பகுதியில் இயங்கும் கலை இலக்கிய அமைப்புகளை திட்டமிடுதல் முதற்கொண்டு எல்லா பணிகளிலும் இணைத்துச் செயல்படும் போது மட்டுமே அதற்கு இலக்கிய முகம் கிடைக்கும். அல்லாதபட்சத்தில் புத்தகக்கண்காட்சியும் அரசின் பல்வேறு திட்டங்களில் ஒன்றாக தனித்துவம் இழந்து போகும் ஆபத்துள்ளது. அந்தந்த மாவட்டத்தில் உள்ள கலை இலக்கிய ஆளுமைகளை பங்கெடுக்கச் செய்வது, அவர்களது நூலாக்கங்களை கிடைக்கச்செய்வது, உள்ளூரில் கருத்தாளர்களே இல்லையென்பதுபோல அனைத்து நாட்களுமே வெளியிடத்திலிருந்து அழைப்பதைத் தவிர்ப்பது போன்ற வழிகாட்டுதல்களைக் கொடுப்பது அவசியம்.
புத்தகக் கண்காட்சி வளாகத்தில்
உள்ள உரையரங்குகளை பள்ளிச்சிறார்களைக் கொண்டு நிரப்பும் வன்முறை நிறுத்தப்பட வேண்டும்.
அவர்களது குழந்தமைக்குத் தொடர்பற்ற தலைப்புகளில் நிகழ்த்தப்படும் உரைகளைக் கேட்டாக
வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அமர்த்துதானது கலை இலக்கியம், புத்தகங்கள், பொது நிகழ்வுகள்
குறித்து குழந்தைகளின் ஆழ்மனதில் எதிர்மறையான விளைவுகளையே உருவாக்கும். இந்நிலை தவிர்க்கப்பட
வேண்டும் என்கிற வழிகாட்டுதலை அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கவேண்டும்.
இலக்கியத் திருவிழாக்கள்:
தமிழ் இலக்கியத் திருவிழா,
மாபெரும் தமிழ்க்கனவு போன்ற கொண்டாட்டங்கள் பாராட்டத்தக்கவை. தமிழர்கள் தமது மொழி,
கலை இலக்கியம், பண்பாடு குறித்து அறிந்துகொள்வதற்கும் கொண்டாடுவதற்கும் இவ்விழாக்கள் நல்வாய்ப்பாக அமைகின்றன. ஆனால் இந்நிகழ்வுகளுக்காக
திட்டமிடுதல் செயல்படுத்துதல் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் கலை இலக்கிய அமைப்புகளை ஒதுக்கிவைத்துவிட்டு
பொறுப்பதிகாரிகளுடன் தொடர்பிலிருக்கும் சில தனிநபர்களிடம் இப்பணிகள் ஒப்படைக்கப்படுகின்றன.
மாபெரும் தமிழ்க்கனவை எப்படி திரும்பத்திரும்ப ஒரு சிறு குழுவே காணமுடியும்? அதிலும்
மாணவர்களிடம் பாலியல் அத்துமீறல் செய்தவர் என்று வெளிப்படையாக அறியப்பட்டவர்களைக்கூட
திரும்பவும் மாணவர்களிடமே பேராளுமையாக கொண்டுபோய் நிறுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதேபோல ஆற்றங்கரை இலக்கியத் திருவிழாக்கள்
வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் நமது பண்பாடு ஆற்றோரங்களில் மட்டுமே உருவானதல்ல. மலைகளிலும்
காடுகளிலும் கடல் சார்ந்தும் பன்னெடுங்காலமாக வாழும் மக்களின் பண்பாடும் சேர்ந்த பன்முகத்தன்மை
கொண்டதே தமிழ்ப்பண்பாடு. எனவே அவற்றுக்குரிய விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும். நிரந்தர
ஏற்பாட்டாளர்கள், நிரந்தரப் பேச்சாளர்கள், நிரந்தரமாய் கனவு காண்பவர்கள் என்கிற நிலை
மாற்றப்பட வேண்டும். சுழற்சிமுறையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் மற்றவர்கள் பங்குபெறுவதை
அரசு உறுதிப்படுத்துவது அவசியம். பங்கேற்கும் ஆளுமைகள்/ கலைஞர்களுக்கு வழங்கப்படும்
மதிப்பூதியத்திலும் தங்குமிடம் போன்ற ஏற்பாடுகளிலும் கடும் பாகுபாடு நிலவுவதை அரசு
சீர்படுத்துவது அவசியம்.
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்