6 Apr 2023

இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை 'சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்' மட்டுமே!

2023 ஏப்ரல் 2 அன்று சென்னையில் நடைபெற்ற ”திருப்பாவையில் நவீன மேலாண்மைப் பாடம்” உள்ளிட்ட மூன்று நூல்களின் வெளியீட்டு விழாவில் பேசிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் நீதிபதி திரு.ஜி.ஆர்.சுவாமிநாதன் தெரிவித்த சில கருத்துகள் அவர் வகிக்கும் பதவியின் மாண்புக்கு ஏற்புடையதல்ல என்ற தமுஎகச கருதுகிறது. “இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது இருந்த Demographic Profile மாறாமல் இருக்கும் வரைதான், அரசமைப்புச்சட்டம் அப்படியே இருக்கும். அப்படி மாறாமல் இருப்பதற்கு பாரதிய தர்மங்களை, சம்பிரதாயங்களை நாம் பின்பற்ற வேண்டும். நான் நீதிபதி என்பதால் இதற்கு மேல் பேச முடியாது” என்று பேசி இருக்கிறார். நீதிபதி என்பதால் வெளிப்படையாக பொதுவெளியில் பேசமுடியாத விசயங்களை நீதிமன்றம் என்ற பாதுகாப்பான அரணுக்குள் இருந்துகொண்டு தனது தீர்ப்பின் மூலம் பேசுகிறாரா என்கிற சந்தேகத்தை கிளறிவிட்டுள்ளது அவரது பேச்சு.
திரு.சுவாமிநாதன் கூறும் Demographic Profile என்பதன் பொருள் மக்கள்தொகை விவரக்குறிப்பு. அதாவது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட போது அப்போது இருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் இருக்கும் சாதி, மத, இன, மொழி புள்ளிவிவரங்கள். அதோடு ”பாரதிய தர்மம்” என்ற சொல்லையும் அரசியல் சட்டத்தின் அடிப்படை போல் சொல்கிறார். அரசியல் சட்டத்திலேயே இல்லாத இவ்விரு சொற்களும் தான் இந்திய அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கிறது என்பதாக அவர் சொல்வது அரசியல் சட்டத்தையே திரிப்பதாகும். மேலும், இதில் மாற்றம் வராமல் இருந்தால்தான் சட்டமே செல்லுபடியாகும் என்கிறார். சனாதனிகளான ஆர்.எஸ்.எஸ்., பாஜக அமைப்பினர் சொல்லும் சனாதான தர்மம் என்பதைத்தான் இவர் பாரதிய தர்மம் என்று பூசிமெழுகுகிறார். பிறப்பின் அடிப்படையில் மக்களை உயர்வு தாழ்வாக பன்மப்படிநிலையாக பிரித்து, அந்தந்த சாதிக்கென வகுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றச் சொல்வதே பாரதிய தர்மம். அதற்கு நேரெதிராக ”சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்கிற கோட்பாட்டினை உள்ளிழைத்து எழுதப்பட்ட இந்திய அரசியல் சட்டத்தை அவமதிக்கும் விதமான சுவாமிநாதனின் உரை கண்டனத்திற்குரியது. 
 
அதே உரையில் ”திராவிடர் குரல்” என்று கரகரப்பான குரலில் கேலி பேசுகிறார். இந்த மண்ணின் பூர்வகுடிகளைக் குறிக்கும் திராவிடர் என்ற சொல்லை பரிகாசமான தொனியில் உச்சரித்து திராவிடர்கள் மீதான காழ்ப்பினை வெளிப்படுத்தியுள்ள அவர், இந்த மண்னின் மக்கள் தொடர்பான வழக்குகளை யாருடைய கண்ணோட்டத்தில் அணுகி எப்படியான தீர்ப்புகளை வழங்குவார் என்கிற ஐயப்பாடு எழுந்துள்ளது. 
 
“தமிழ் ஆர்வலர்கள் என்றால் இரண்டு திருக்குறளாவது சொல்லுங்கள்” என்று கேட்கும் அவர், தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத விஜயேந்திரரின் செயலை கண்டிக்கவில்லை. அதற்கு மாறாக அவர் பெயரை “பால பெரியவா” என்று விளிப்பதுடன் அவரைப் பாதுகாக்கும் நோக்கோடு “அவர் மோனநிலையில் இருந்தார்” என்று பொதுமேடையில் நின்றுகொண்டு வராத வழக்கிற்கு தீர்ப்பு எழுதிக்கொண்டிருக்கிறார். உயர்நீதிமன்றத்தை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் பேசிய ஒரு நபரோடு அந்த மேடையை மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுமிருக்கிறார். இதன் மூலம் திரு.சுவாமிநாதன் ஒருபால்கோடாமையோடு நீதி வழங்கும் பொறுப்பிற்குரிய மாண்பினைக் காக்கத் தவறியுள்ளார். எனவே இவரது மேற்கண்ட பேச்சு பற்றி உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துமாறு தமிழ்நாடு அரசை  தமுஎகச கேட்டுக்கொள்கிறது. 
 
இவண்,
 
மதுக்கூர் இராமலிங்கம்,  மாநிலத்தலைவர்                     
ஆதவன் தீட்சண்யா பொதுச்செயலாளர்

06.04.2023