5 Apr 2023

காவிரி டெல்டாவில் நிலக்கரிச் சுரங்கம் அமைக்க தமுஎகச எதிர்ப்பு

நாடு முழுவதும் 101 நிலக்கரிச் சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை இந்திய ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில், தமிழ்நாட்டின் உணவு உற்பத்தி மண்டலம் என்கிற தனிச்சிறப்பு வாய்ந்த காவிரி டெல்டா மாவட்டங்களில் மூன்று சுரங்கங்களைத் தோண்டப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வரலாற்றிலும் கலை இலக்கியத்திலும் பண்பாட்டிலும் தொல்காலந்தொட்டு செழித்துப் பரவியுள்ள காவிரிப்படுகையை புதைகுழிகளாக மாற்றத் துடிக்கும் ஒன்றிய அரசின் இம்முடிவை தமுஎகச கண்டிக்கிறது.
 
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் 84.41 சதுர கி.மீ, அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் மைக்கேல்பட்டியில் 14.8 சதுர கி.மீ, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் வடசேரியில் 68.30 சதுர கி.மீ என இச்சுரங்கங்களின் பரப்பளவு குறிப்பிடப்பட்டுள்ளது. ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு சட்டத்தினால்’ பாதுகாக்கப்பட்ட இப்பகுதிகளில் சுரங்கம் தோண்டுவது ஏற்கத்தக்கதல்ல. ஏற்கெனவே நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி சுரங்க நடவடிக்கைகளால் கடலூர் மாவட்டம் முழுவதுமே பாதிப்படைந்துள்ள நிலையில், அதனையடுத்துள்ள நிலப்பரப்பையும் பாழ்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும். 
 
சுற்றுச்சூழல் சீர்கேடு, விளைநிலமும் நிலத்தடி நீரும் பாழாகுதல், உணவு உற்பத்திப் பரப்பு குறைதல், வாழ்வாதாரம் இழப்பு என பல்வேறு வகையிலும் பாதிப்பினை உருவாக்கக்கூடிய இத்திட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும். மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டின் விளைநிலங்களை- குறிப்பாக காவிரி டெல்டா பகுதியைச் சூறையாடத் துடிக்கும் ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு எதிராக தமிழ்நாட்டு மக்களும் தமிழ்நாடு அரசும்  மேற்கொண்டுள்ள நிலைப்பாட்டில் தமுஎகச இணைகிறது. 
 
இவண்
 
மதுக்கூர் இராமலிங்கம்,
மாநிலத்தலைவர்                                  
ஆதவன் தீட்சண்யா
 பொதுச்செயலாளர்

05.04.2023