சென்னை, கோவை, தர்மபுரி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், புதுச்சேரி உள்ளிட்டு நாடு முழுவதுமுள்ள அகில இந்திய வானொலி நிலையங்கள் 23 மொழிகளிலும் 179 வட்டார மொழிகளிலும் நிகழ்ச்சிகளை படைத்தளித்து வருகின்றன. நாட்டுப்புற இசை, கர்நாடக இசை, நாடகம் என்பதான கலைவடிவங்களோடு விவசாயம், கல்வி, பொதுசுகாதாரம், அறிவியல், இலக்கியம், தொழிலாளர் நலன் சார்ந்த நிகழ்வுகளையும், பண்பலை வழியாக திரையிசைப் பாடல்களையும் ஒலிபரப்பி வருகின்றன. இவற்றுடன், பிரதமரின் மாதாந்திர உரையையும், மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் பெரும்பணியையும் ஆற்றிவருகின்றன. இந்நிகழ்வுகளில் பங்கேற்கும் நாட்டுப்புற இசைக்கலைஞர்கள், குரல் வடிவ நாடகக் கலைஞர்கள், கர்நாடக இசைக்கலைஞர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களும் உரிய வெகுமதியை வழங்குகின்றன. ஆனால் இந்த வெகுமதியை விடவும் வானொலி நிலையத்தில் பங்கேற்பதால் கிடைக்கும் கௌரவத்தையும், அதன் மூலம் அரசின் பிற பிரச்சார வடிவங்களில் கிடைக்கும் வாய்ப்புகளையுமே இவர்கள் பெரிதாக மதிக்கின்றனர்.
இந்நிலையில், சென்றாண்டு கொரானா ஊரடங்குக் காலத்தில் நிகழ்ச்சிகள் தயாரிக்க முதன்முதலாக தடை வந்தது. இந்தாண்டு தளர்வுகள் வந்தபின் நிகழ்ச்சிகள் வழக்கம் போல் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என கலைஞர்கள் உள்ளிட்டோரும், நிகழ்ச்சி தயாரிப்பதனால் தங்களுக்கு வேலையும் ஊதியமும் கிடைக்கும் என தொகுப்பூதிய பணியாளர்களும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிரசார் பாரதி நிர்வாகம் அனைத்து வானொலி நிலையங்களுக்கும் நிகழ்ச்சி தயாரிக்க கொடுக்கப்படும் தொகையினை 50 சதவீதத்திற்கும் குறைவாக வெட்டிச் சுருக்கியது. அடுத்த பேரிடியாக அனைத்து வானொலி நிலையங்களும் எல்லா நாட்களும் நிகழ்ச்சிகளைத் தயாரிப்பதற்கு பதிலாக வாரத்திற்கு ஒருநாள் மட்டும் தயாரிப்பது, மற்ற நாட்களில் சென்னை வானொலி நிலையத்திலிருந்து நிகழ்ச்சிகளை வாங்கி அஞ்சல் செய்வது என்கிற திட்டம் 2021 அக்டோபர் முதல் அமலாகக்கூடும் என்கிற தகவல் கசிந்துள்ளது.
இதனால் அந்தந்த வட்டார மக்களின் திறன்களும் தேவைகளும் முற்றாக புறக்கணிக்கப்படும். கும்மி, வில்லுப்பாட்டு, கதைப்பாட்டு, ஒப்பாரி என மரபார்ந்த கலைகளுக்கான ஆதரவும் மறுக்கப்படும். மட்டுமன்றி, நிகழ்ச்சி தயாரிப்பில் உதவிவரும் தொகுப்பூதிய பணியாளர்கள் சுமார் 1000 பேரின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும். புதுச்சேரியின் பிரஞ்சிந்திய கலாச்சாரத்தின் ஒருபகுதியாக வாரந்தோறும் இடம்பெறும் பிரஞ்சுமொழி நிகழ்ச்சியும், புதுச்சேரி சட்டசபையின் நடவடிக்கைகளும் புறக்கணிப்பிற்குள்ளாகும்.
அரசியல் சாசனத்தின் வழி நின்று நாட்டின் கலை இலக்கியம் பண்பாட்டு நடவடிக்கைகளின் ஊடாக மக்களுக்கும் அரசிற்கும் இடையே தகவல் பரிமாற்றச் சேவையாற்றும் இவ்வானொலி நிலையங்களை வர்த்தக நோக்கில் பார்ப்பது ஏற்புடையதல்ல. இத்தனைக்கும் ஊழியர் பற்றாக்குறை பெரிதாக இருந்துவரும் இக்காலத்திலும் வானொலி நிலையங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட விளம்பர இலக்கினை நிறைவேற்றி வருவதாகவும் தெரிகிறது.
பன்மைத்தன்மையே இந்திய நாட்டின் அடையாளம். வட்டார மொழி வடிவம், மரபுசார் கலைகள், மண்சார் இலக்கியம், அந்தந்தப் பகுதிசார் விவசாயம் ஆகியவற்றுக்கு இதுகாறும் அளித்துவந்த ஆதரவினை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி விலக்கிக்கொள்ளும் முடிவினை பிரசார் பாரதி நிர்வாகம் உடனடியாக மறுபரிசீலனை செய்திடல் வேண்டும். அதிகாரக்குவிப்பு, ஒற்றைத்துவ கருத்தியல் திணிப்பு ஆகிய தனது இழிநோக்கங்களுக்காக ஒன்றிய அரசானது, பிரசார் பாரதி நிர்வாகத்தின் மூலம் அகில இந்திய வானொலி நிலையங்களின் சுதந்திரமான பன்மைத்துவமான செயல்பாட்டை முடக்கிப்போடும் செயல்களை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் வலியுறுத்துகிறது.
இப்படிக்கு,
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ)
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்