பெறுகை
தலைவர்
நீதியரசர் மாண்புமிகு ஏ.கே. ராஜன் உயர்நிலை குழு
மருத்துவக் கல்வி இயக்ககம்,
3வது தளம், கீழ்ப்பாக்கம்., சென்னை- 600010
அய்யா,
பொருள்: நீட் தேர்வின் மூலம் மருத்துவச் சேர்க்கையில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்- நீட்டை கைவிடக் கோருதல்
– தொடர்பாக.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் 1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்தே கலை இலக்கியம், பண்பாடு, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சமூக நீதி ஆகிய தளங்களில் தீவிரமாக இயங்கிவருகின்றது. சமூகத்திற்கு மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செய்துவருகின்ற எழுத்தாளர்கள், கலைஞர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கலைநேயர்கள், ஆய்வாளர்கள், கல்வியாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள இவ்வமைப்பு நீட் தேர்வினை அதன் தொடக்கநிலையிலிருந்தே எதிர்த்துவருகிறது.
நீட் தேர்வை திணித்தபோது அதை நியாயப்படுத்தி ஒன்றிய அரசால் முன்வைக்கப்பட்ட தகுதி, திறமை, வெளிப்படைத்தன்மை, வணிகமயத் தடுப்பு போன்ற வாதங்கள் அனைத்துமே உண்மைக்கு மாறானவை என்பதை நடைமுறை நிரூபித்துவிட்டபடியால் அவற்றை திரும்பவும் சொல்வதைத் தவிர்த்து பொருட்படுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்களை தங்களது குழுவின் கவனத்திற்கு தமுஎகச முன்வைக்கிறது.
உலகின் தொன்மையான இனங்களில் ஒன்றெனும் வகையில் தமிழினம் தனது சொந்த வாழ்வனுபங்களினூடாக உருவாக்கிக் கொண்ட பண்பாட்டில் கல்விக்கு எப்போதுமே முதன்மையான இடத்தை வழங்கிவந்திருக்கிறது. கல்வியின் தத்துவம் அதன் நோக்கங்கள் மற்றும் தனிமனித வாழ்விலும் சமூகத்திலும் அதனால் நிகழவேண்டிய ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தொடர்பாக இடையறாது இங்கு நடந்துவரும் விவாதங்களிலிருந்து தமிழினம் தனக்கான கல்வியை உருவாக்கிக்கொண்டுள்ளதுடன் காலத்துக்குக் காலம் மேம்படுத்தி ஓரளவுக்கு தற்காலப்படுத்தியும் வந்துள்ளது.
கல்விசார்ந்த மதிப்பீட்டளவுகள் பலவற்றில் தமிழ்நாடு அகில இந்திய சராசரியைவிடவும் பலபடிகள் முன்னேறியுள்ளதற்கு மற்றுமொரு வலுவான காரணம் இங்குள்ள சமூகநீதிக் கண்ணோட்டமாகும். வர்ணாஸ்ரமப் படிநிலையாலும் சாதியப் பாகுபாட்டினாலும் யாருக்கெல்லாம் சமூக வாழ்வின் எந்தெந்த நிலைகளிலும் தளங்களிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டதோ அங்கெல்லாம் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்காக நடத்தப்பட்டுவரும் நெடிய போராட்டத்தின் உடனிகழ்வாக கல்விப் பரவலாக்கமும் நிகழ்ந்துவருகிறது. இவ்வாறாக பெண்கள், அட்டவணைச் சாதியினர், பழங்குடிகள், மத/மொழி/பாலினச் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், கிராமப்புறத்தவர் ஆகியோர் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியையும் எட்டும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கல்விப்புலத்தில் தமிழகம் அடைந்துள்ள இந்த முன்னேற்றங்களை பின்னுக்கு இழுப்பதாக நீட் தேர்வு இருக்கிறது என்பதற்கு கடந்தாண்டுகளின் அனுபவங்களே போதுமான சான்றாதாரங்கள் என எமது அமைப்பு கருதுகிறது.
தனது மொழியின் கல்வியாளர்களால் உருவாக்கப்பட்ட மாநில பாடத்திட்டத்தில், தனது மொழியுறவு ஆசிரியர்களினது 12 ஆண்டு கால பயிற்றுவிப்பில் கற்றல் செயல்பாட்டை மேற்கொள்ளும் மாணவர் அதன் தொடர்ச்சியில் மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்குள் நுழைவதே சரி. (இவ்விசயத்தில் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் பரிந்துரை கவனங்கொள்ளத்தக்கது). எனவே தமிழ்நாடு பாடத்திட்டம், கல்விக்கூடம், ஆசிரியத்துவம், 12 ஆண்டுகால படிப்புழைப்பு ஆகியவற்றை மதிப்பற்றதாக்கும் நீட் தேர்வு அவசியமற்றது என தமுஎகச கருதுகிறது.
12 ஆம் வகுப்புவரை மாநிலப்பாடத்திட்டத்தில் படித்தவர்களை, அவர்களது தாய்மொழியில் அல்லாத, அவர்களது கற்றல் வரம்புக்குத் தொடர்பற்ற, அவர்களது பண்பாட்டுச் சூழமைவுக்கு புறத்தே உருவாக்கப்பட்ட மத்திய பள்ளிக்கல்வி வாரிய பாடத்திட்டத்தின் படியான நீட்தேர்வை எழுதவைப்பது இயற்கை நீதிக்கு எதிரானது.
பல்வேறு மாநிலங்களின் பாடத்திட்டங்களைப்போலவே மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தின் பாடத்திட்டமும் அவற்றில் ஒன்றுதானே தவிர, அது அப்படியொன்றும் எல்லாவற்றுக்கும் மேலானதோ பொதுவானதோ அல்ல, ஆனால் வேறானது, கற்பித்தல் கற்றல் முறையிலும் சற்றே மாறுபட்டது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ் இயங்கிவரும் பள்ளிகளில் பெரும்பாலானவை உயர் வருவாய்ப் பிரிவினர் மற்றும் ஒன்றிய அரசதிகாரிகள் ஊழியர்கள் குடும்பத்துப் பிள்ளைகளுக்காக நகரங்களில் இயங்கிவருபவை. நாட்டின் மொத்த மாணவர்களில் 10சதத்தினர்கூட படித்திராத அந்தப் பாடத்திட்டத்தின் படியான நீட் தேர்வை அனைவரும் எழுதியாக வேண்டும் என்பதை ஒரு பண்பாட்டுத்தாக்குதலாகவே எமது அமைப்பு கருதுகிறது.
நீட், எடுத்தயெடுப்பிலேயே மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களில் பெரும்பகுதியினரை வடிகட்டி நீக்கிவிடுகிறது. முதல்முறை எழுதும் தேர்வில் மத்திய பள்ளிக்கல்வி வாரிய பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களிலும்கூட வெகுசிலரே தேர்ச்சியடைய முடிகிறது. அதற்கும் அவர்கள் பள்ளிக்குள்ளேயோ தனியாகவோ பயிற்சி வகுப்பிற்கு செல்லவேண்டியுள்ளது. இந்தப் பயிற்சி வகுப்பிற்கென பெருந்தொகை செலவழித்தாக வேண்டும் என்கிற நிலையில் அங்கொரு பகுதியினர் வடிகட்டி நீக்கப்படுகின்றனர். பயிற்சிமையங்கள் உள்ள நகரங்களுக்கு வரமுடியாத கிராமப்புறத்தவர் வடிகட்டி நீக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் அட்டவணைச் சாதியினர், பழங்குடியினர், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் என்பதை கவனத்தில் கொண்டால் அவர்கள் தமது “பிரதிநிதித்துவத்தை” பெறமுடியாமல் போவதைக் காணமுடியும். இவ்வாறாக மொழி, பாலினம், சாதி, நிலப்பரப்பு, பொருளாதாரம் எனப் பல்வேறு நிலைகளில் பாரபட்சம் காட்டுகிற நீட்தேர்வை கைவிடுவது சமூகநீதிக்கான நடவடிக்கை எனக் கருதுகிறது தமுஎகச.
மாநிலப் பாடத்திட்டத்தில் +2வரை படித்துவிட்டு வேறொரு பாடத்திட்டத்தில் நீட் எழுதும் இக்கட்டிலிருந்து தப்பிக்க நீட் தேர்வை எழுதுவதற்கு இசைவான பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் ஆங்கிலோ-இந்தி பள்ளிக்கூடங்களை நோக்கி மாணவர்கள் விரட்டியிழுக்கப்படுகிறார்கள். பல தனியார் பள்ளிகள் மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து வெளியேறி மத்திய பள்ளிக்கல்வி வாரியத்தில் இணைகின்றன. நுழைவுத்தேர்வுக்கு இசைவான பாடத்திட்டங்களின் கீழாக புதிய தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகள் மாணவர்களின் தாய்மொழியை ஒரு மொழிப்பாடமாகக்கூட சொல்லித் தருவதில்லை. இதற்கொரு கேடுகெட்ட உதாரணம் தமிழகத்திலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகள். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், ஜெர்மனி போன்ற மொழிகளே இங்கு முன்னிலைப்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டின் பண்பாட்டு வாழ்விற்கு சற்றும் தொடர்பற்ற இத்தகைய கல்வி வளாகங்களுக்குள் அனுப்பப்படும் குழந்தைகள் தமது சொந்த பண்பாட்டு விழுமியங்கள் அற்ற குடிமக்களாக உருவாகும் அவலம் நேர்ந்துகொண்டிருக்கிறது. அத்துடன், பொதுப்பள்ளி இலவசக்கல்வி என்கிற மக்களாட்சி இலக்குகளை நடைமுறையில் போக்கடித்து சாதி, மதம், பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றை சமூக மூலதனமாக ஏற்கனவே பெற்றிருப்பவர்களால் வாங்கப்படுகிற ஒரு பண்டமாக கல்வியை மாற்றும் சதியும் நீட் வழியே நடக்கிறது. ஆக, மருத்துவம் பயில விரும்பும் சில ஆயிரம் மாணவர்களின் மீது மட்டுமல்லாது ஒட்டுமொத்த கல்விப்புலத்தின் மீதும் பெருங்கேடுகளை விளைவித்துக் கொண்டிருக்கிறது என்பதாலுமே நீட் தேர்வினை எமது அமைப்பு எதிர்க்கிறது.
பொதுத்தேர்வுக்காக மட்டுமன்றி நுழைவுத்தேர்வுக்காகவும் படித்தாக வேண்டிய நெருக்கடியில் மாணவர்கள் தமது பருவத்திற்கே உரிய சமூக வாழ்வை வாழ்வதிலிருந்து துண்டிக்கப்பட்டு விடுகின்றனர். குடும்பவிழாக்கள், திருவிழாக்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், பயணங்கள், அரசியல் நிகழ்வுகள், விளையாட்டுகள் போன்ற பண்பாட்டு நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கப்படுகிற அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இயல்பாக இணைவதில் உள்ள உளவியல் சிக்கல்களை பரிசீலித்தாலும் நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் அவசியமற்றவை என்கிற முடிவுக்கே வரவேண்டியுள்ளது.
எத்தனை ஆண்டுகள் வேண்டுமாயினும் பயிற்சி எடுத்து தேர்ச்சி பெறும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எழுதும் வாய்ப்பு பற்றி விதந்தோதப்படுகிறது. ஆனால் இதற்கான நேரத்தையும் பொருட்செலவையும் தாங்கும் சக்தி எவ்வளவுபேருக்கு இருக்கிறது? இந்தத் தயாரிப்புக்காலத்தில் உண்டாகும் மனவுளைச்சலுக்கும் நிச்சயமற்றத்தன்மைக்கும் யார் பொறுப்பேற்பது? இப்படி காலந்தப்பி தேர்ச்சி பெற்று தம்மிலும் இளையவர்களோடு ஒரு வகுப்பில் படிப்பவர்கள் உளரீதியாக எவ்வளவு குன்றிப்போவார்கள் என்பது பற்றி நீட் ஆதரவாளர்கள் பேசுவதேயில்லை.
+2 முடித்ததுமே மருத்துவம் படிப்பதற்குச் சென்றுவிட வேண்டிய மாணவர்கள் நீட் தயாரிப்புக்காக இழக்கும் வருடங்களை அவர்களுக்கு யார் திருப்பித்தருவது? செயலூக்கமான மாணவப் பருவத்தின் பெரும்பகுதியை இவ்வாறு தேர்வு குறித்த அச்சத்திலும் தோல்வியினால் துவண்டு தாழ்வுணர்ச்சியில் முடங்குவதும் ஆளுமைச்சிதைவுக்காளாகி தற்கொலையுண்டு மாய்வதுமாக எமது சந்ததியினரை அழிக்கும் பெருங்குற்றத்தை இழைத்துக்கொண்டிருக்கும் நீட் தேர்வினை கைவிட்டேயாக வேண்டும்.
நீட் தேர்வினைக் கைவிட்டு +2 பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கையை நடத்தும்போது கைக்கொள்ள வேண்டிய இரண்டு நடவடிக்கைகள்:
1. அந்தந்த வகுப்புக்கான பாடங்களை மட்டுமே அந்தந்த வகுப்பில் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும். +2 பாடங்களை முந்தைய கல்வி ஆண்டிலிருந்தே நடத்தி மாணவர்களை வதைத்து மதிப்பெண்களை போலியாக பெருக்கிக்காட்டும் மோசடி தடுக்கப்பட வேண்டும்.
2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியின் இடங்கள் இப்போதைக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இது நாளடைவில் அரசுப்பள்ளிகளுக்கான முன்னுரிமையாக மாற்றப்பட வேண்டும்.
உண்மையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
23.06.2021