12 Jun 2021

வற்றிய கண்களிலிருந்து வானுயரம் எம்பிய குத்துவாள்: எழுத்தாளர் சித்தலிங்கையா - தமுஎகச புகழஞ்சலி

          கன்னடத்தில் எழுதிவந்திருந்தாலும் நாடு முழுவதுமுள்ள கலைஇலக்கியச் சமூகத்தினரால் மரியாதையின் உச்சிகளில் வைத்து கொண்டாடப்பட்ட கவிஞர் சித்தலிங்கய்யா அவர்களை கொரானா பெருந்தொற்று நம்மிடமிருந்து நேற்று பறித்துக்கொண்டது. “பூமித்தாய் பெறாத பிள்ளைகள்” இலக்கியத்தின் ஓரஞ்சாரத்தில் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சமூகத்தின் பேசுபொருளாக்கிய தலித் இலக்கியத்தை கன்னடத்தில் தோற்றுவித்த முன்னோடிகளில் ஒருவர். தொந்தரவில்லாத விசயங்களை எழுதிக் குவிக்கும் போக்கினை நிலைகுலையச் செய்யும்  ஆவேசத்தோடு பண்டாயா என்கிற கலகவகை எழுத்துகளை தொடங்கிவைத்தவர்களில் அவரும் ஒருவர். 

    அலங்காரமான மொழிச்சுமையை உதறி அவரே ஒரு கவிதையில் சொல்வதுபோல தன் மக்களின் “பூகம்பம் போன்ற மொழியோடு” அவரெழுதிய கவிதைகள் ஒடுக்கப்பட்ட மக்களின் அகத்தையும் முகத்தையும் அதுவரையறியா வண்ணங்களில் காட்டின. இந்த நாடு தீண்டப்படுகிறவர்களின் இந்தியா என்றும் தீண்டப்படாதவர்களின் இந்தியா என்றும் இரண்டாக பிளவுண்டிருக்கிறது என்னும் அண்ணல் அம்பேத்கரின் கூற்றுக்கு வாழ்வியல் விளக்கமாக விளங்குகிறது சித்தலிங்கய்யாவின் தன்வரலாற்று நூலான ஊரும் சேரியும். 

        2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 10ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை, கலைஇலக்கியத்தை ஒடுக்கப்பட்ட மக்களின் போராயுதங்களில் ஒன்றாக மாற்றியமைக்கும் பொறுப்பை உணர்த்துவதாயிருந்தது. தமிழில் சாதியொழிப்பு மற்றும் சமத்துவத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகளின் முன்வரிசைப் போராளியாகவும் கல்வியாளராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இடையறாது செயல்பட்டு வந்த சித்தலிங்கய்யா இப்பணிகளில் எதுவொன்றையும் தனது எழுத்துப்பணிக்கு எதிராக நிறுத்தியவரல்ல. தமிழில் படிக்கக்கிடைக்கும் சித்தலிங்கய்யாவின் எழுத்துகள் வழியே நமக்குள் உருவாகியிருக்கும் சித்திரத்தை விடவும் நெடிதுயர்ந்த ஆளுமையான அவரது மறைவுக்கு தமுஎகச தனது செவ்வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது.        

அன்புடன்

மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

12.06.2021