தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், “இலக்கிய மாமணி” என்ற விருதினை உருவாக்கி, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் வழங்குவது என்கிற தமிழ்நாடு அரசின் முடிவை தமுஎகச பாராட்டி வரவேற்கிறது. பாராட்டுப்பத்திரமும் ஐந்து லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் கொண்ட இவ்விருது ஒன்றிய, மாநில அரசுகளால் இலக்கியத்திற்கென வழங்கப்படுவதிலேயே அதிக தொகையைக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கின்ற அல்லது விரும்புகிற மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு கட்டித் தரப்படும் என்கிற கனவு இல்லம் என்கிற திட்டமும் பாராட்டுக்குரியது.
எழுத்தாளர்களின் ஆக்கச் செயல்பாடுகளுக்கான சமூக அங்கீகாரத்தையும் மதிப்பையும் அவர்களது நூல்களைப் படிப்பதற்கான கவனக்குவிப்பையும் இவ்விரு அறிவிப்புகளும் உருவாக்குமெனக் கருதுகிறது தமுஎகச. இதேபோல 70 கோடி ரூபாயில் மதுரையில் தமிழ்நாடு அரசால் அமைக்கப்படும் கலைஞர் நூலகம், அறிவுத்தேடல் கொண்டோரின் பேரார்வங்களை நிறைவுசெய்வதாய் அமைந்திட தமுஎகச தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் ( பொறுப்பு )
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்
03.06.2021