7 Oct 2020

இந்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித்தகுதியில், செம்மொழிகள் வரிசையில் தமிழ் மொழி இல்லாததற்கு தமுஎகச மாநிலக்குழு கண்டனம்.

இந்திய தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா தொல்லியல் நிறுவனத்தில் இரண்டாண்டு முதுநிலை பட்டய மேற்படிப்பில் சேர்வதற்கான இணைய வழி விண்ணப்பம் கோரி அறிவிக்கை பத்திரிகைகளில் வெளியாகியுள்ளது.  அதில் இந்தப்படிப்பில்  சேர்ந்து படிப்பதற்கான கல்வித் தகுதியாக இந்திய வரலாறு/ தொல்லியல்/ மானுடவியல்/ இந்திய செம்மொழிகளான சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், பாரசீகம் (அ) அரபி ஆகிய மொழிகளில் ஏதாவது ஒன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் உலகின் மூத்த மொழிகளில் ஒன்றென மதிக்கப்படுவதும் இந்தியாவின் தொன்மையான மொழிகளில் முதன்மையானதுமான தமிழ் இப்பட்டியலில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ், தமிழர் நாகரிகம் தொடர்பான விசயங்களில் இந்திய தொல்லியல் துறை  கடைபிடித்துவரும் ஒவ்வாமையின்  தொடர்ச்சியாகவே இந்தப் புறக்கணிப்பும் நடந்துள்ளதாக தமுஎகச கருதுகிறது.  

அறியப்பட்ட வரலாற்றின் மீது புதிய வெளிச்சத்தையும் பரிமாணத்தையும் தரக்கூடிய தொல்லியல் சான்றுகளோடு தமிழும் தமிழ்ச்சமூகமும் இருப்பது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு உவப்பானதாக இல்லை. ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழைப் புறக்கணிக்க அவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய பாரபட்சப் போக்கு ஏற்கத்தக்கதல்ல.

உயர்தனிச் செம்மொழியான தமிழுக்கு உரிய இடத்தை தொல்லியல் துறையும், ஒன்றிய அரசும் வழங்க வேண்டும். அத்துடன் மேற்கண்ட சேர்க்கை அறிவிக்கையில் தமிழை அதற்கு உரிய இடத்தில் இணைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.


மதுக்கூர் இராமலிங்கம்                            மாநிலத்தலைவர் (பொறுப்பு)   

ஆதவன் தீட்சண்யா                                    பொதுச்செயலாளர்

07.10.2020