3 Jun 2020

" காட்மேன்" இணையவழி கதைத்தொடர் வெளியீட்டை உறுதிசெய்க

தமிழக அரசுக்கு தமுஎகச கோரிக்கை

Zee5 நிறுவனம் தமிழில் ’காட்மேன்’ என்னும் இணையவழி கதைத்தொடரை இளங்கோ ரகுபதி என்பவரது ஃபெதர்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் மூலம் தயாரித்திருக்கிறது. இத்தொடரை பாபு யோகேஸ்வரன் எழுதி இயக்கியிருக்கிறார்.
2020 ஜூன் 12 ஆம்தேதி Zee5 செயலியில் வெளியாகவிருந்த இத்தொடரின் முன்னோட்டக் காட்சி (டீஸர்) 26.05.2020 அன்று யூ ட்யூபிலும் Zee5 நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. 
இந்த ஒரு நிமிட முன்னோட்டக் காட்சியில் இடம் பெற்றிருக்கும் சில வசனங்கள் தங்கள் சாதியினரை அவமதிப்பதாகவும், ஆகவே இத்தொடரைத் தடை செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு பிராமணச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் தமிழகத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்திருக்கிறார்கள். 
380 நிமிடங்கள் கொண்ட இத்தொடரின் ஒரு நிமிட முன்னோட்டக்காட்சியை மட்டுமே பார்த்துவிட்டு இத்தொடர் தங்களுக்கு எதிரானது என்கிற முடிவுக்கு சிலர் வருவது அபத்தமானது. அப்படியே எதிரானதாக இருந்தாலும் நேரடியாக வெளிப்படுத்தப்படும் கருத்துக்களையும் புனைவின் ஊடாக வெளிப்படுத்தப்படும் கருத்துகளையும் ஒன்றேபோல கருதக்கூடாது. சமூக நடப்புகளால் உந்தப்பட்டு புனைவாக வெளிப்படுத்தப்படும் ஒரு கலையாக்கத்தை விமர்சிக்கவும் கண்டிக்கவும் மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கவும் எவரொருக்கும் உரிமையுண்டு. ஆனால் அதை தடைசெய்ய வேண்டும் என்று கோருவது அரசியல் சாசனத்தால் உறுதிசெய்யப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று ஏற்கனவே பல தீர்ப்புகள் வெளியாகியுள்ள நிலையில் காட்மேன் தொடரை தடைசெய்யக் கோருவதை ஏற்கமுடியாது.
இத்தொடரின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் தொடர்பு எண்கள் சில விஷமிகளால் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுள்ளன. அதனால் இவ்விருவரும் தொலைபேசிவழியே அச்சுறுத்தலுக்கும் அவமதிப்புக்கும் ஆளாகிவருகின்றனர். தயாரிப்பாளர் ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி என்றும் பெரும் மதக்கலவரத்தைத் தூண்டிவிடும் சதியின் ஒருபகுதியாகவே இத்தொடர் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது. கோயமுத்தூர் கோயிலில் பன்றிக்கறியை வீசி மதக்கலவரத்தைத் தூண்ட முயன்ற ஹரி என்பவர் இவர்தான் என்று தயாரிப்பாளரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது. சுதந்திரமான கலைச்செயல்பாடுகளுக்காக கலைஞர்கள் இவ்வாறு அச்சுறுத்தப்படுவதற்கு எதிராக குரலெழுப்பும் கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களுடன் தமுஎகச ஒருமித்து நிற்கிறது.
காட்சி ஊடகத்துறைக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தலுக்குப் பணிந்துபோகாமல் காட்மேன் தொடரை திட்டமிட்டவகையில் Zee5 திரையிட வேண்டும். அதற்கான பாதுகாப்பை அரசியல் சாசனத்தின் பேரால் தமிழக அரசு வழங்கிட வேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது. படைப்பிலக்கியம், கலை தொடர்பான புகார்களை அதிகாரிகளும் அரசுகளும் அணுகவேண்டிய முறை குறித்து பெருமாள் முருகன் வழக்கு தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் வெளிச்சத்தில் காட்மேன் விசயத்தை தமிழக அரசு கையாள வேண்டும் எனவும் தமுஎகச வலியுறுத்துகிறது.

அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு),
 
ஆதவன் தீட்சண்யா,
பொதுச்செயலாளர்