கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஜூன் ஒன்றாம் தேதி முதல் நடத்தும் முடிவை ஒத்திவைக்க வேண்டுமென தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக அவ்வமைப்பின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
கொரானா தாக்குதல் மற்றும் ஊரடங்கினால் வாழ்க்கை குறித்த நம்பிக்கையின்மையும் பேரச்சமும் உலகெங்கும் பீடித்துவருகிறது. கொரோனோ தொற்றுப் பரவலை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் கடந்த மூன்று மாதகாலமாக பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுக் கிடக்கின்றன.
நான்காம் கட்ட ஊரடங்கு மே 18 முதல் மே 31 ஆம் தேதி நள்ளிரவுவரை அமலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவின் அடுத்த நாளே – அதாவது வரும் ஜூன் 1 ஆம் தேதியன்றே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் உளவியலாளர்கள் என பலரையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்த அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது.
எதற்காக இத்தனை அவசரம்… இவ்வளவு சிக்கலான காலச்சூழலிலும் கூட தேர்வை நடத்தியே தீர வேண்டும் எனும் அரசின் அவசரத்தின் மீது பொதுமக்களின் சந்தேக நிழல் படியத் துவங்கியிருக்கிறது. இதற்குப்பின் இருக்கும் வணிகநோக்கம் என்ன எனும் கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள்.
தமிழகத்தில் மாணவர்கள் மார்ச் 24ஆம் தேதி பள்ளியை விட்டும் கல்விச்சூழலை விட்டும் முற்றிலுமாக அரசால் வெளியேற்றப்பட்டனர். பள்ளிகள் மூடப்பட்டுக் கிடப்பதால் படித்திருந்த பாடங்கள் அனைத்தும் இந்த இடைப்பட்ட காலத்தில் மறந்துபோயிருக்கும். பாடங்களை நினைவூட்டிக்கொள்ள போதிய அவகாசமோ கல்விச்சூழலையோ ஏற்படுத்திக் கொடுக்காமல், நேரடியாக தேர்வெழுத மாணவர்களை கட்டாயப்படுத்தினால் அவர்களால் எவ்வாறு தேர்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்?
70 சதத்திற்கும் மேற்பட்ட பத்தாம் வகுப்பு மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் கல்வி பயில்பவர்களே. அன்றாடத்தை நகர்த்துவதற்கே தவித்துக் கிடக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களை 70 நாட்கள் கழித்து எந்த முன் தயாரிப்புமின்றி தேர்வெழுதச் சொல்லி நிர்பந்தம் செய்வது மிகக்கொடிய வன்முறை. இது லட்சக்கணக்கான குடும்பங்களின் மீது அரசு பிரயோகிக்கும் உளவியல் நெருக்கடி. ஊரடங்குக் காலத்தின் மன அழுத்தங்கள், தனிமையுணர்வு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு இயல்புக்குத் திரும்புவதற்கான கால அவகாசம் குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
தேர்வு வைத்தே தீர்வதென்பது அரசின் கொள்கை முடிவென்றாலும் கூட அதற்கு பொருத்தமான காலம் இதுவல்ல. குறைந்தது இருபது நாட்களாவது கல்விச்சூழலுக்கு மாணவர்கள் பழகவேண்டும். மறந்து போன பாடங்களை நினைவூட்டிக் கொள்வதற்காக மட்டுமல்ல. தேர்வு எழுதிடும் மனவலிமையை பெறுவதற்கும் கூட கால அவகாசம் தேவைப்படுகிறது.
தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும் எனச் சொல்லிக்கொண்டே இத்தேர்வு நடைமுறைகள் மூலம் அந்த இடைவெளியை இல்லாது ஒழிக்கும் தமிழக அரசின் நடவடிக்கை ஏற்கத்தக்கதல்ல. எனவே, ஜுன் 1ஆம் தேதி பொதுத்தேர்வு நடத்தும் முடிவை அரசு கைவிட்டு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என தமுஎகச வலியுறுத்துகிறது. ஊரடங்கு முடிந்தபின், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்களை நினைவூட்டிக்கொண்டு தேர்வுக்கு தயாராகும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்த பின்பே இத்தேர்வுகளை நடத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
ஆதவன் தீட்சண்யா , பொதுச்செயலாளர்