மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் ஊடகவியலாளர்களின் பொறுப்புணர்வையும் உழைப்பையும் பாராட்டுவதற்கு பதிலாக அவர்கள் சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச்சட்டம் (UAPA) போன்ற கொடிய சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்படும் அபாயம் நாடெங்கும் பரவிவருகிறது. இதனொரு பகுதியாகவே, கோவையிலிருந்து செயல்படும் சிம்பிளிசிட்டி.இன் இணையதளச் செய்தி நிறுவன நிர்வாகி ஆண்ட்ரூ சாம்ராஜ பாண்டியன் கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கருதுகிறது. ஊடகச்சுதந்திரத்தையும் பன்முகத் தகவல்களை அறிவதற்கான மக்களின் உரிமையையும் பறிக்கிற இச்செயலை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது.
சிம்பிளிசிட்டி.இன் இணையதளத்தில் வெளியான இரண்டு செய்திகளே இந்த கைதுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒரு செய்தி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்படுவதில்லை என்றும், இன்னொரு செய்தி மக்களுக்கான இலவச ரேசன் பொருள்கள் விநியோகத்தில் சிலர் முறைகேடு செய்வதாகவும் தெரிவிக்கின்றன. இச்செய்திகள் உண்மையாக இருக்குமானால் உடனடியாகத் தலையிட்டுச் சரிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான வாய்ப்பாகவே அரசும் உயரதிகாரிகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நெருக்கடியான சூழலில் அரசின் கவனத்திற்கு இப்படிப்பட்ட தகவல்கள் வருவது மக்களுக்கான பணிகள் சீராக நடைபெறுவதற்கே உதவும்.
இரண்டும் தவறான தகவல்கள் என்றால் வழக்குத் தொடுப்பது, நீதிமன்றத் தீர்ப்புப்படி செயல்படுவது போன்ற செயல்பாடுகளை யாரும் எதிர்க்கப்போவதில்லை. அதைவிடுத்து ஒரு புகாரின் பேரில் நிர்வாகியைக் கைது செய்திருப்பது செய்திகளில் கூறப்பட்டுள்ள முறைகேடுகளை ஊக்குவிப்பதாகவே அமையும். கடுமையான சவால்களுக்கிடையே பணியாற்றிக்கொண்டிருக்கிற ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதாகவும் இருக்கும்.
இணையதள நிர்வாகி காவல்நிலையத்திற்கு வந்து கைதாகிற வரையில் நிறுவனத்தின் செய்தியாளர் ஜெரால்டு, ஒளிப்பதிவாளர் பாலாஜி இருவரும் பிணைக்கைதிகள் போல எட்டுமணி நேரத்திற்கு மேல் பிடித்து வைக்கப்பட்டிருந்திருக்கிறார்கள். தகவலறிந்து வந்த ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு காவல்துறையினர் எவ்வித பதிலும் அளிக்காமல் உதாசினம் செய்துள்ளனர். இந்த மோசமான மூன்றாந்தர வழிமுறை கடும் விமர்சனத்திற்குரியது.
அபாயகரமான நிலைமையிலும் பணியாற்றிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களுக்கு அண்மையில்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டுத் தெரிவித்தார், அவர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால் அரசு நிதியுதவி வழங்கிப் பாதுகாக்கும் என்றார். ஆனால் இப்போதோ இந்த மூன்று பத்திரிகையாளர்களுக்கும் அரசாங்கத்திடமிருந்தே அபாயகரமான நிலைமையும் பாதிப்பும் ஏற்பட்டிருப்பதை ஊடகச் சுதந்திரத்திற்கு எதிரான அடக்குமுறை என தமுஎகச கருதுகிறது.
மத்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் ஊடகவியலாளரான அர்னாப் கோஸ்வாமி மீது எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் புகார் பதிவு செய்திருக்கிறார்கள். ஒரே ஒரு புகாரைத் தவிர மற்றவற்றைத் தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், அவரைக் கைது செய்வதற்கும் தடை விதித்துள்ளது. பத்திரிகைச் சுதந்திரம் நாட்டின் அரசமைப்பு சாசன 19(1)ஏ அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளதுடன், அது தொடர்பான 6 கொள்கைகளையும் வரையறுத்துக் கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த வழிகாட்டுதல் அரசு நடவடிக்கைகளின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் ஆண்ட்ரூ சாம்ராஜ பாண்டியன் போன்றவர்களுக்கும் பொருந்தும் என வலியுறுத்தும் தமுஎகச, இந்தக் கைது நடவடிக்கையை வன்மையாகக் கண்டிப்பதுடன் உடனடியாக அவரை விடுதலை செய்யவும், மக்களுக்குத் தகவல்கள் தடையின்றிப் போய்ச் சேர்வதை உறுதிப்படுத்தவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது. செய்தி சேகரிப்பதற்காக மட்டுமல்லாமல், உரிமையைக் காப்பதற்காகவும் களத்தில் நிற்கிற ஊடகவியலாளர்களோடு தமுஎகச தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறது.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
- ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்