5 Apr 2020

விளக்கை அணைத்து விளக்கேற்றுவது வீண்வேலை

கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதும், அந்நோய் மேலும் பரவாமல் தடுப்பதும்தான் அரசின் முதன்மைப்பணியாக இருக்கமுடியும். ஆனால் கொரானா தடுப்பு மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப்பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்குக்கூட போதிய தற்காப்புச்சாதனங்கள் வழங்கப்படாத அவலநிலை நீடிக்கிறது. எவ்வித முன்தயாரிப்பும் இன்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். வாழ்வாதாரம் தேடி வெளிமாநிலங்களுக்குச் சென்றிருந்த பல லட்சம் தொழிலாளர்கள் அங்கேயே இருக்கமுடியாத சூழலில் தம் சொந்த ஊர் திரும்ப வாகனங்கள் இன்றி பலநூறு மைல்களை நடந்தே மாய்கின்றனர். காவல்துறையினர் பலரும் அவர்களை மனிதத்தன்மையற்ற வகையில் கண்ணியக்குறைவாக நடத்துவது தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் காட்சிகள் நாகரிகச்சமூகத்தால் ஏற்கத்தக்கவையல்ல. கொரானா பரவலுக்கு குறிப்பிட்ட மதத்தினர்தான் காரணம் என்று தவறாக அடையாளப்படுத்தி துன்புறுத்துவதும் துவேஷம் காட்டுவதுமான கொடுமைகளும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

மருத்துவம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான தேவைகளை நிறைவேற்றி மக்களைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயலாற்றவேண்டிய இந்நேரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அதற்கிசைவானதாக இல்லை என தமுஎகச கருதுகிறது. அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே உருவாக்குவது என்கிற அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலைக் கொண்டு நெருக்கடியான இச்சூழலை எதிர்கொள்வதற்கு பதிலாக கேலிக்குரிய மூடத்தனங்களை மத்திய அரசு பரப்பிவருகிறது. அந்தவகையில் அது ஏற்கனவே அறிவித்த கைத்தட்டல் இயக்கம் “தனிமனித விலகலை” மறுத்து நோய்த்தொற்று பரவலை தீவிரப்படுத்தவே உதவியது என்கிற கண்டனத்திற்கு ஆளானது. ஆனாலும் இப்போது மீண்டும் அதேவிதத்தில் அறிவியலுக்குப் புறம்பான நடவடிக்கை ஒன்றுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 5ஆம் நாள் இரவு 9மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு வேறுவகையான விளக்குகளை 9 நிமிடங்கள் ஒளிரச்செய்ய வேண்டும் என்கிற அவரது அறிவிப்பு எந்தவகையிலும் கொரானா ஒழிப்புக்குரியதல்ல. கொரானாவிலிருந்து தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற ஒற்றை இலக்கில் குவிந்துள்ள மக்களின் கூட்டுணர்வையும் விழைவையும் கொச்சைப்படுத்தி அவமதிப்பதுமாகும்.

நாடுதழுவிய அளவில் ஒரே நேரத்தில் மின்விளக்குகளை அணைத்துவைத்து மீண்டும் எரிய விடுவதால் தேசிய மின்தொகுப்பிற்கும் வீடுகளில் உள்ள மின் உபயோகப் பொருட்களுக்கும் தான் பாதிப்பேயன்றி கொரானாவுக்கு எந்தச் சேதாரமும் ஏற்படப்போவதில்லை. வெளிச்சத்தை இருட்டாக்கி மீண்டும் ஒளியூட்டும் இந்த வீண்வேலை பிரதமரின் அழைப்புதானேயன்றி அரசின் முடிவல்ல. ஒருவேளை அரசின் முடிவாகவே இருந்தாலும் இது ஓர் அரசு செய்யத்தக்கதல்ல என்று உணர்த்தும் பொறுப்புவாய்ந்த குடிமக்களாக நம் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம். அதன்பொருட்டு இன்றிரவு ஒன்பது மணிக்கு விளக்கை அணைப்பதையும் பின்பு ஏற்றுவதையும் நிராகரித்து உருப்படியான வேறுவேலைகளில் ஈடுபடுமாறு மக்களை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்