தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ஆகியவற்றின் தலைவர்களில் ஒருவரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான பேராசிரியர் அருணன் அவர்களின் நூல்களை வெளியிட்டுவரும் பதிப்பகத்தார் சங் பரிவாரத்தினரால் மிரட்டப்படுவதை தமுஎகச வன்மையாக கண்டிக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களிலும் குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு இயக்கங்களிலும் பங்கெடுக்கும் அருணன் சங் பரிவாரத்தினர் மீதும் மத்திய அரசின் மீதும் கொள்கைப்பூர்வமாக விமர்சனங்களை சமரசமின்றி முன்வைப்பவர். சமூக வரலாறு, மதச்சார்பின்மை, சமூகநீதி, பகுத்தறிவு, சோசலிசம் ஆகியவை சார்ந்து தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிவருபவர் அருணன். இவரது ‘காலந்தோறும் பிராமணீயம்’ என்கிற நூல்தொகுதி பேசும் உண்மைகளை சகித்துக்கொள்ள முடியாமல் ஆத்திரமுற்றுள்ள சங் பரிவாரத்தினர், இந்நூலை வெளியிட்டுள்ள பதிப்பகத்தாரை செல்பேசியில் மிரட்டியும் எழுதத்தகாத சொற்களில் ஆபாசமாக திட்டியும் வருகின்றனர்.
கருத்துரிமையினையும் மாற்றுக்கருத்தையும் வரலாற்று உண்மைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தையும் முன்வைப்பவர்களை அச்சுறுத்தலாலும் அவதூறுகளாலும் பணியவைக்கலாமென சங் பரிவாரத்தினர் மேற்கொண்டுள்ள இத்தகைய இழிமுயற்சியை தமுஎகச கண்டிக்கிறது. தமிழ்ச்சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்குப் புறம்பான பார்ப்பனீயத்தையும் அதன் பாதுகாவலர்களான சங் பரிவாரத்தினரையும் எதிர்த்து பேரா அருணன் மேற்கொண்டுள்ள கருத்தியல் போராட்டத்தில் தமுஎகச உடன் நிற்கும்.
அன்புடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு)
ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்