26 Mar 2020

நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் மண்சார் மரபுக்கலைஞர்களுக்கும் ஈட்டுத்தொகை வழங்குக - தமுஎகச கோரிக்கை

கொரானா தொற்றுநோய் பரவலைத் தடுக்கும் பொருட்டு மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாட்களுக்கான ஊரடங்கு 25.03.2020 நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால். அடுத்துவரும் நாட்களில் நடக்கவிருந்த கலை இலக்கிய நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. வழக்கமாக கோடையில் நடக்கின்ற ஊர் திருவிழாக்கள், கோயில் கொடை போன்றவையும் ஊரடங்கால் இவ்வாண்டு நடப்பதற்கான வாய்ப்பு தடைபட்டுள்ளது. இந்தப் பொதுநிகழ்வுகளில் கலைநிகழ்ச்சிகளை நடத்தி அதன்மூலமான வருவாயினால் கண்ணியமான வாழ்வை மேற்கொள்ளும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப்புறக் கலைஞர்களும் மண்சார் மரபுக்கலைஞர்களும் இப்போது வாழ்வாதாரத்தை இழந்து வீட்டோடு முடங்கிக் கிடக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

நாட்டுப்புறக்கலைஞர்களையும் மண்சார் மரபுக்கலைஞர்களையும் பாதுகாப்பதன் வழியாகவே தமிழ்ச்சமூகத்தின் தொன்மையான கலைவடிவங்களைப் பேணி பாதுகாக்க முடியும். எனவே, ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்துள்ள இவர்களை பாதுகாக்கும் பொறுப்பை தமிழக அரசு ஏற்க வேண்டுமென தமுஎகச வலியுறுத்துகிறது. இது தொடர்பாக தமுஎகச சார்பிலும் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் ஏற்கனெவே அளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனு மீது தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மண்டலவாரியாகவோ நலவாரியத்தின் மூலமாகவோ அடையாள அட்டை பெற்றவர்கள், அடையாள அட்டையைப் புதுப்பிக்கத் தவறியவர்கள் மற்றும் பெறாதவர்கள் என்றுள்ள இவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு நசிவுற்றுள்ள இவர்களுக்கான இழப்பீட்டை நேரடியாக வழங்குவதற்குரிய வழிமுறைகளை தமிழக அரசு தாமதமின்றி வகுக்கவேண்டும் எனவும் தமுஎகச  கேட்டுக்கொள்கிறது. 

தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொறுப்பு) - 

ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்