திரைக்கலைஞர் சூர்யாவின் கருத்துரிமையை பாதுகாப்போம்
தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவறிக்கையை வெளியிட்டுள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அதன்மீது கருத்துரைக்குமாறு குடிமக்களை கேட்டுக்கொண்டுள்ளது. அதனடிப்படையில் பொறுப்புள்ள குடிமகனாக திரைக்கலைஞர் சூர்யா இந்த வரைவறிக்கை மீது தனது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அகரம் பவுன்டேஷன் என்கிற அமைப்பின் வழியே தொடர்ந்து அடித்தள மக்களிடையே கல்விப்பணி ஆற்றிவருவதன் மூலம் பெற்றுள்ள அனுபவத்திலிருந்து அவர் தெரிவித்துள்ள கருத்தானது இந்த வரைவறிக்கை குறித்த சரியான விமரிசனமுமாகும்.
மாநிலங்களின் உரிமை, அறிவியல் கண்ணோட்டத்துடன் கூடிய இலவசமான தாய்மொழிக்கல்வி, சமூகநீதி உள்ளிட்ட இந்திய அரசியல் சாசனத்தின் ஆதாரமான நோக்கங்களுக்கு இந்த வரைவறிக்கை எதிரானது. முன்பருவக்கல்வி முதல் உயர்கல்வி வரை அனைத்தையும் எவ்வித கட்டுப்பாடுமின்றி தனியார்வசம் ஒப்படைக்கிற இது பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி என்பவற்றை ஏட்டளவிலும் இல்லாமலாக்கி கிராமப்புற, அடித்தள மாணவர்கள் கல்வி பெறுவதை தடுக்கிறது. மூன்று வயதிலேயே குழந்தைமையைப் பறிக்கிறது. பாடச்சுமைக்கு ஆளாகும் நமது குழந்தைகள் மீது மும்மொழி என்கிற பெயரால் இந்தி/ சமஸ்கிருதத்தை திணிக்கிறது. அடுத்தடுத்து பொதுத்தேர்வுகளையும் நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தை உருவாக்கி மாணவர்களை அச்சத்திற்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாக்கக்கூடியது. இந்தத் தேர்வு வடிகட்டிகளால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிக்கும். இவ்வளவு இடர்களையும் மீறி பெரும் பொருட்செலவில் பெறக்கூடிய கல்வியோ அறிவியல்பூர்வமானதாக அல்லாமல் இந்திய பாரம்பரியம் என்கிற பெயரில் புராண இதிகாச தற்பெருமை பேசக்கூடியதாக இருக்கும் என்பதை இந்த வரைவறிக்கையை படிக்கக் கூடிய எவரும் உணர்வார்கள். சூர்யாவும் அவ்வாறு தான் உணர்ந்ததையே வெளிப்படுத்தியிருக்கிறார்.
சூர்யா முன்வைத்த விமர்சனத்திற்கு வெகுமக்களிடையே ஆதரவு பெருகுவதைக் கண்டு மத்திய மாநில ஆளுங்கட்சியினர் ஒருசேர ஆத்திரமடைந்துள்ளனர். கருத்து கேட்பதாக ஜனநாயக வேடத்தை காட்டிக் கொண்டே மாற்றுக்கருத்து சொன்ன சூர்யாவை அவதூறுகளாலும் அச்சுறுத்தலாலும் சிறுமைப்படுத்தி வாயடைக்கச் செய்யும் இவர்களின் இழிமுயற்சியை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. இந்திய அரசியல் சாசனம் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வழங்கியுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை கைக்கொண்டு சூர்யா போலவே பிற கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களும் மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் குரலெழுப்ப முன்வர வேண்டும் எனவும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
சு.வெங்கடேசன், எம்.பி, மாநிலத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்