27 Jun 2019

கோரிக்கை மனு

மதுரை மக்களவை உறுப்பினரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான சு.வெங்கடேசன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் இன்று அளித்த கோரிக்கை மனு:

# தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவை இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை தனது வலைத்தளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் 2019 ஜூன் முதல் நாள் வெளியிட்டு 2019 ஜூன் 30ஆம் தேதிக்குள்  அனைவரும் கருத்து தெரிவிக்கலாம் எனக் கூறியிருந்தது. (இன்று மேலும் ஒருமாதத்திற்கு நீட்டித்துள்ளது). 484 பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம் தமிழ் உள்ளிட்ட வேறெந்த இந்திய மொழியிலும் வெளியிடப்படவில்லை.  வரைவு தேசிய கல்விக்கொள்கை மீது இந்தியும் ஆங்கிலமும் படிக்கத் தெரிந்த – இணையத்தில் படிக்க வாய்ப்புள்ள மக்கள் மட்டுமே கருத்து தெரிவித்தால் போதுமானது, இவ்விரு மொழி தெரியாத, பிற மொழி பேசும் மக்கள் கருத்து தெரிவிக்கவேண்டியது அவசியமில்லை என்ற தவறான புரிதலை இது ஏற்படுத்துகிறது. 

# வரைவறிக்கை தயாரிப்புக்குழு 2018 டிசம்பர் 15ஆம் தேதி அறிக்கையை இறுதிப்படுத்தி கையொப்பமிட்டுள்ளது. ஆனாலும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் தரப்பட்டதோ 2019 மே 31 அன்றுதான். தயாராக இருந்த அறிக்கையை அரசிடம் தருவதற்கு ஐந்தரை மாத காலதாமதத்திற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை.  தாமதத்திற்கான காரணத்தைக் குழுவிடம் கேட்கத் தவறிய மனிதவள மேம்பாட்டுத்துறை,  இந்திய மக்களை முப்பது நாட்களுக்குள் தங்களது கருத்தை தெரிவிக்கச் சொல்லியுள்ளது. மாநில அரசுகளுக்கும் இதே கால அவகாசம் தான் தரப்பட்டுள்ளது.‌

# கல்வி குறித்த கொள்கை முடிவுகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது தான் மத்திய கல்வி ஆலோசனைக் குழு (CABE). மாநிலக் கல்வி அமைச்சர்கள் இதன் கூட்டங்களில் பங்கேற்று முடிவுகளை மேற்கொள்வர். இக்குழுவைக் கூட்டி தேசிய கல்விக்கொள்கை வரைவை உருவாக்கிட ஒரு குழு அமைக்கப்படவில்லை. அவ்வாறான நடவடிக்கைக்கு முன்பாக இன்றைய கல்விநிலை குறித்த அறிக்கையை தயாரித்து வெளியிட்டிருக்க வேண்டும். மக்களாட்சி மாண்பிற்கும் கூட்டாட்சி முறைக்கும் உட்பட்ட இத்தகைய அணுகுமுறை தற்போதைய கல்விக்கொள்கை வரைவினை தயாரித்த குழு அமைக்கப்பட்டதில் பின்பற்றப்படவில்லை.  

# தேசிய கல்விக்கொள்கை வரைவு தற்போதைய பள்ளி, கல்லூரி அமைப்பை முற்றிலுமாக மாற்றி, புதிய அமைப்பை உருவாக்க முயல்கிறது. அத்தகைய புதிய அமைப்பில் சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய மக்களின் நலனுக்கு எதிரான பல அம்சங்களை இந்தக் கொள்கை வரைவு கொண்டிருப்பதான அச்சம் எழுந்துள்ளது. 

# தேசிய கல்வி ஆணையம் (RSA) என்ற அமைப்பை பிரதமர் தலைமையில் உருவாக்கும் பரிந்துரை இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. இதன் விளைவாக கல்வித்துறையில் மக்கள் நலன் சார்ந்து, மாநிலத் தேவைகளை கருத்தில் கொண்டு  சுயமாக முடிவெடுக்கும் உரிமையை  மாநில அரசு முற்றிலுமாக இழக்கும்.

# தேசிய கல்விக் கொள்கை வரைவு இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும் அதன் பல்வேறு பிரிவுகளுக்கும் முரணாக அமைந்துள்ளது. 

# தேசிய கல்விக்கொள்கை வரைவு ஏற்படுத்தும் தாக்கத்தை குறித்தும் அத்தகைய ஆவணம் தமிழ் உள்ளிட்ட வேறெந்த இந்திய மொழிகளிலும் வெளியிடப்படாத சூழலில் ‌ குறுகிய காலத்தில் மக்கள் கருத்து தெரிவிக்க இயலாது என்பதை அரசுக்கு உணர்த்திட   கல்வியாளர்கள், மாணவர், பெற்றோர், ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு  அமைப்புகளும் தமிழ்நாட்டில் பல வடிவங்களில் கவன ஈர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ள மின்னஞ்சல் வாயிலாக இந்திய மொழிகளில் வரைவை வெளியிடவும், கருத்து தெரிவிக்கும் காலத்தை நீட்டிக்கவும் பல்லாயிரம் பேர் கோரிக்கை அனுப்பியுள்ளனர். 

# மாநில அரசு தன் கருத்தை தெரிவிக்க அதன் பல்வேறு துறைகளை கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. பள்ளிக் கல்வித்துறை, உயர் கல்வித்துறை, சுகாதாரம், சட்டம், சமூக நலத்துறை உள்ளிட்ட துறைகளில் இவ்வரைவு ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து ஆலோசித்து அவற்றை தொகுத்து மாநிலத்தின் கருத்தாக தெரிவிக்க வேண்டுமாயின் தற்போது நீட்டித்துள்ள 30 நாட்கள் கால அவகாசமும் கூட அரசுக்கு போதாது. முழுமையான ஆலோசனை நடத்தாமல் அவசர அவசரமாக மாநில அரசு கருத்து தெரிவிப்பது நியாயமற்றது. ஏற்கத்தக்கது அன்று. 

# மாநில மக்களின் மொழியில் வரைவை   தராமல் குறுகிய காலத்திற்குள் மக்களிடம் கருத்து கேட்பது நியாயமற்ற நடவடிக்கை. மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து இந்திய மொழிகளிலும் - குறைந்தபட்சம் அட்டவணை எட்டில் இடம் பெற்றுள்ள மொழிகளிலாவது மொழிபெயர்த்து தந்து, மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து குறைந்தது ஆறு மாத காலமாவது கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கிட வேண்டும் எனக் கோருகிறேன்.

வாழ்த்துகளுடன்,
சு.வெங்கடேசன்,
மதுரை மக்களவை உறுப்பினர்