செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவிலிருந்து நாகசாமியை நீக்கு!
- மத்திய அரசுக்கு தமுஎகச கோரிக்கை
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை தன் ஆட்சிக்காலம் முழுவதும் முடக்கி வைத்துள்ள மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், செம்மொழி தமிழாய்வுக்கான குடியரசுத்தலைவரின் 2016-17, 2018-19 ஆண்டுகளுக்குரிய விருதாளர்களை தேர்வு செய்யும் குழுவினை இப்போது அறிவித்துள்ளது. தமிழ் மொழியையும் அதன் தொல்லிலக்கியங்களையும் தமிழக மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தியும் திரித்தும் எழுதிவருகிற இரா.நாகசாமியும் இக்குழுவில் இடம் பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் இயக்குநர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆய்வு நேர்மையின்றி அவர் செய்துவந்த வரலாற்றுத் திரிபுகள் ஏற்கனவே அறிஞர்கள் பலராலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் தமிழகம் வேதங்களின் நாடு, திருக்குறள் சமஸ்கிருத நூல்களின் தழுவல், சிலப்பதிகாரம் காப்பியமேயல்ல, தமிழ்மொழியின் வரிவடிவத்தை உருவாக்கியவர்கள் பார்ப்பனர்கள் என்றெல்லாம் திரித்துக்கூறி இந்துத்துவத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவகத்திற்காகவே மத்திய அரசு அவருக்கு பத்மவிருதினை வழங்கியது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, இப்போது இந்தத் தேர்வுக்குழுவிலும் அவரை இடம்பெறச் செய்திருக்கிறது. வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாக, தமிழ் ஒரு செம்மொழியே அல்ல என்று சிறுமைப்படுத்தி வருகிற நாகசாமி செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருப்பது அக்குழுவின் அடிப்படை நோக்கத்திற்கும் நடுநிலைத்தன்மைக்கும் ஊறுவிளைவிக்கும் என்று தமிழாய்ந்த அறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் இலக்கிய அமைப்புகளும் வெளிப்படுத்தியுள்ள ஐயத்துடன் தமுஎகச உடன்படுகிறது. இனியும் தாமதியாமல் செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவிலிருந்து நாகசாமியை நீக்கிவிட்டு தகுதியான அறிஞர்களைக் கொண்டு பதிலீடு செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், மாநில தன்னாட்சி, தமிழின் தனித்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இவ்விசயத்தில் மாநில அரசும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது.
சு. வெங்கடேசன், மாநிலத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்