16 Mar 2019

அகழ்வாய்வு எவ்வித முட்டுக்கட்டையுமின்றித் தொடர. .


தமிழர் நாகரிகத்தின் தொன்மையைப் பாதுகாத்து வைத்திருக்கும் கீழடி உண்மையை வெளிவராமல் புதைப்பதற்குப் பண்பாட்டு ஆதிக்க அமைப்பாகிய ஆர்எஸ்எஸ்  வழிகாட்டலில் மத்திய அரசு ஏற்படுத்திய தடைகள் வரலாற்றாளர்களால் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியது தெரிந்ததே. ஆனாலும் இந்திய தொல்லியல் துறை ஆய்வாளரும் கீழடி அகழாய்வுக் கண்காணிப்பாளருமான கி. அமர்நாத் ராமகிருஷ்ணன், அந்த ஆய்வின் முக்கியக்கட்டத்தில் இங்கிருந்து அஸ்ஸாம் மாநிலத்திற்கு மத்திய அரசால் தூக்கியடிக்கப்பட்டார்.  இது தொடர்பான பொதுநல வழக்கில் 2019 மார்ச் 15 அன்று  தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, அமர்நாத் ராமகிருஷ்ணனை மறுபடியும் கீழடி அகழ்வாராய்ச்சிப் பொறுப்பாளராக இடம் மாற்றுவதற்கு ஆணையிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தின் கீழடி கிராமத்தில் வைகை நதிக்கரையில் தழைத்திருந்த ஒரு தொன்மையான நாகரிகத்தைக் கண்டறிய இட்டுச்சென்ற அகழ்வாய்வு நடைமுறைகளில் மத்திய அரசு பெரும் அக்கறையையும் முனைப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன், பி.டி. ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு கூறியுள்ளது. அத்துடன், “இந்த ஆராய்ச்சி நிறைவடையும்போது தமிழர் நாகரிகப் பெருமையை உலகமே அங்கீகரிக்கும், ஆனால் இப்பிரச்சினையில் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பது எங்களுக்கு வியப்பளிக்கிறது,” என்றும் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

கீழடி உண்மைகளை மறைக்கும் சதிகளை எதிர்த்தும், தமிழர் தொன்மைக்கான தடயங்கள் மக்கள் முன் வைக்கப்படவும் போராடி வந்திருப்போருக்கு மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளிப்பதான இந்தத் தீர்ப்பினை, இதற்காக பல்வேறு போராட்டங்களையும் சென்னையில் சிறப்பு மாநாட்டையும் நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பாராட்டி வரவேற்கிறது. தீர்ப்பினை காலதாமதமின்றிச் செயல்படுத்தவும், அகழ்வாய்வு எவ்வித முட்டுக்கட்டையுமின்றித் தொடரவும், ஆய்வு முடிவுகள் விரைவில் உலக மக்கள் முன்பாக வைக்கப்படவும் மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், தமிழக அரசும் இதில் முறையாகத் தலையிட்டு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது.

சு.வெங்கடேசன், மாநிலத் தலைவர்                     ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

13 Mar 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மனிதச்சங்கிலி – தமுஎகச பங்கேற்பு

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை எதிர்ப்பு மனிதச்சங்கிலி – தமுஎகச பங்கேற்பு

பொள்ளாச்சியில் அரசியல் செல்வாக்குள்ள ஒரு கும்பல் கடந்த ஏழாண்டுகளாக பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமைகளை நடத்திவந்துள்ளனர். இவ்விசயம் காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டும் உரிய கவனம் செலுத்தப்படாத நிலையில் காலம் தாழ்த்தியே அவர்களில் நால்வர் தற்போது கைதாகியுள்ளனர். இந்த கொடுஞ்செயலில் தொடர்புடைய இன்னும் பலர்  கைது செய்யப்படவில்லை என்பதுடன் அவர்களை தப்புவிப்பதற்கான முயற்சிகள்  நடைபெறுவதாகவும் தெரிகிறது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இப்பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து அதற்குரிய தன்மையில் செயல்படாததுடன் வழக்கின் போக்கை திசைதிருப்பும் விதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன. இதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கடும் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாததாலும்  தேர்தல் நேரத்தில் இப்பிரச்னையை பின்னுக்குத் தள்ளுவதற்காகவும் கைதாகியுள்ளவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பதுடன் வழக்கையும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட பெண்கள் அச்சமின்றி புகாரளிப்பதற்கான நம்பகத்தையும் பாதுகாப்பையும் வழங்கவேண்டும், சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்களிடையே உருவாகியுள்ள எதிர்பார்ப்பு மிக நியாயமானதென தமுஎகச வலியுறுத்துகிறது.

இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு மக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். வாய்ப்புள்ள இடங்களில்/ வடிவங்களில் மக்களைத் திரட்டும் பணியை தமுஎகச மாவட்டக்குழுக்களும் முன்னெடுக்கின்றன. இதேநோக்கில் 15.03.2019 அன்று பொள்ளாச்சியிலும், சென்னையிலும் மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலும் மகளிர் அமைப்புகள் நடத்தவுள்ள மனிதச்சங்கிலி இயக்கத்தில் தமுஎகச கரமிணைக்கிறது. அவ்வாறே பங்கெடுக்குமாறு சமூக அக்கறையுள்ள கலை இலக்கிய ஊடகச் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட  யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்                     ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

9 Mar 2019

கலைஞர் ரோஹிணியை மிரட்டும் கும்பலுக்கு தமுஎகச கண்டனம்


திரைக்கலைஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவருமான ரோஹிணி, தனது கலைப்பணியில் முனைப்புடன் செயலாற்றிக்கொண்டே சமூகப்பிரச்னைகள் மீது கூரிய விமர்சனங்களை முன்வைப்பதுடன் களப்போராட்டங்களிலும் பங்கெடுத்து வருபவர். மலையாள தொலைக்காட்சி ஒன்றின் சமீபத்திய நேர்காணலில் அவரிடம், பிரதமர் ‘மோடியிடமும் ராகுல் காந்தியிடமும் நீங்கள் கேட்பதற்கு ஏதுமுள்ளதா எனக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ‘மோடியிடம் கேட்பதற்கு எனக்கு ஏதுமில்லை, ஆனால் சொல்வதற்கு இருக்கிறது. மோடி அவர்களே தயவு செய்து தேர்தலில் போட்டியிடாதீர்கள், இப்படியான பாசிச ஆட்சி இனி ஒருபோதும் தேவையில்லை. கடந்த ஐந்தாண்டுகளாக இந்துத்வாவை அதிக அளவில் கண்டுவிட்டோம். இந்துத்துவாவுக்கு எதிரானவர்களை, விமர்சித்துப் பேசுகிறவர்களைக் கொலை செய்வோருக்கு ஆதரவளித்து ஊக்குவிக்கும் ஒருவர் நாட்டின் தலைவராக மீண்டும் வருவதை நாங்கள் விரும்பவில்லை’ என்று பதிலளித்திருந்தார். விரிவான இந்த நேர்காணலில் இந்த ஒரு பகுதியை மட்டும் தமிழ் இதழ் ஒன்றும் வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.

ஆட்சியாளர்களின் கடுமையான கண்காணிப்புக்கும் கருத்தியல் ஒடுக்குமுறைக்கும் ஆளாகியுள்ள இந்த நாடு அமைதி, நல்லிணக்கம், கண்ணியமான வாழ்வு ஆகியவற்றுக்கு திரும்பவேண்டும் என விரும்பும் கோடானுகோடி மக்களின் உள்ளக்கிடக்கையையே ரோஹிணி வெளிப்படுத்தியுள்ளார். இதற்காக அவரை ஒரு கும்பல் அலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் வழியே மிரட்டி அவதூறு செய்துவருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் அஞ்சியோ பணிந்தோ தன் கருத்துரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்று ரோஹிணி தெரிவித்திருப்பதை தமுஎகச பாராட்டுகிறது. 

திறக்கப்படாத ரயில் நிலையத்தில் டீ விற்றுக்கொண்டிருந்ததாக சொல்லிக்கொள்ளும் மோடி அந்த வேலையை விட்டுவிட்டு ஏன் பிரதமரானார் என்று கேட்காதவர்கள், அவரது ஆட்சியை விமர்சிக்கிற ரோஹிணியை மட்டும் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஏன் அரசியல் பேசுகிறாய் என்று கேட்பது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. அரசின் நடவடிக்கைகள் உள்ளிட்ட எதன் மீதும் சுதந்திரமாக கருத்து சொல்வதற்கு நாட்டின் அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையை அச்சுறுத்தலாலும் அவதூறுகளாலும் ரோஹிணிக்கு மறுப்பதற்கான சட்டவிரோத முயற்சிகளை தமுஎகச கண்டிக்கிறது. ஜனநாயகத்திலும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திலும் நம்பிக்கையுள்ள யாவரும்  இவ்விசயத்தில் தமது கண்டனத்தை தெரிவிக்குமாறு தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு,
சு.வெங்கடேசன், மாநிலத் தலைவர்                          ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்

4 Mar 2019

செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவிலிருந்து நாகசாமியை நீக்கு!

செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவிலிருந்து நாகசாமியை நீக்கு!
- மத்திய அரசுக்கு தமுஎகச கோரிக்கை

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயல்பாடுகளை தன் ஆட்சிக்காலம் முழுவதும் முடக்கி வைத்துள்ள மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், செம்மொழி தமிழாய்வுக்கான குடியரசுத்தலைவரின் 2016-17, 2018-19 ஆண்டுகளுக்குரிய விருதாளர்களை தேர்வு செய்யும் குழுவினை இப்போது அறிவித்துள்ளது. தமிழ் மொழியையும் அதன் தொல்லிலக்கியங்களையும் தமிழக மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தியும் திரித்தும் எழுதிவருகிற இரா.நாகசாமியும் இக்குழுவில் இடம் பெற்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் தொல்லியல் துறையின் இயக்குநர் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு ஆய்வு நேர்மையின்றி அவர் செய்துவந்த வரலாற்றுத் திரிபுகள் ஏற்கனவே அறிஞர்கள் பலராலும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆயினும் தமிழகம் வேதங்களின் நாடு, திருக்குறள் சமஸ்கிருத நூல்களின் தழுவல், சிலப்பதிகாரம் காப்பியமேயல்ல,  தமிழ்மொழியின் வரிவடிவத்தை உருவாக்கியவர்கள் பார்ப்பனர்கள் என்றெல்லாம் திரித்துக்கூறி இந்துத்துவத்திற்கு அவர் ஆற்றிவரும் சேவகத்திற்காகவே மத்திய அரசு அவருக்கு பத்மவிருதினை வழங்கியது என்கிற குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, இப்போது இந்தத் தேர்வுக்குழுவிலும் அவரை இடம்பெறச் செய்திருக்கிறது. வரலாற்று உண்மைகளுக்குப் புறம்பாக, தமிழ் ஒரு செம்மொழியே அல்ல என்று சிறுமைப்படுத்தி வருகிற நாகசாமி செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருப்பது அக்குழுவின் அடிப்படை நோக்கத்திற்கும் நடுநிலைத்தன்மைக்கும் ஊறுவிளைவிக்கும் என்று தமிழாய்ந்த அறிஞர்களும் அரசியல் இயக்கங்களும் இலக்கிய அமைப்புகளும்  வெளிப்படுத்தியுள்ள ஐயத்துடன் தமுஎகச உடன்படுகிறது. இனியும் தாமதியாமல் செம்மொழித் தமிழாய்வு விருதாளர் தேர்வுக்குழுவிலிருந்து நாகசாமியை நீக்கிவிட்டு தகுதியான அறிஞர்களைக் கொண்டு பதிலீடு செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும், மாநில தன்னாட்சி, தமிழின் தனித்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இவ்விசயத்தில் மாநில அரசும் கவனம் செலுத்தவேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது.

சு. வெங்கடேசன், மாநிலத்தலைவர்                       ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்