குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்பது குறித்த ஆய்வுகளும், நூல்களும் இந்தியாவிலும், பிறநாடுகளிலும் வெளிவந்துள்ளன. குழந்தைகளிடம் கற்றல் குறைபாடு கண்டறியப்பட்டால் அதை எவ்வாறு களைவதென ஆய்ந்து, களைந்திடும் பொறுப்பை பல நாடுகளில் அந்தந்த அரசுகளே ஏற்கின்றன. இதற்கு நேர்மாறாக இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் நிர்வாகரீதியில் முடிவெடுத்து ஒட்டுமொத்தப் பழியையும் மாணவர்கள் மீதே போட முயற்சிக்கின்றன. அதனொரு பகுதியாகத்தான் 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்ற சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. தமிழக அரசு, எந்த விவாதமுமின்றி மத்திய அரசின் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட அலுவலர்கள் மூலம் முயற்சித்தது. இது 8ஆம் வகுப்புவரை இடைநிற்றல் இல்லாத தேர்ச்சி என்கிற தமிழக அரசின் கொள்கைமுடிவுக்கு எதிரானது.
தேர்வு என்றால் என்னவென்றே புரிந்துகொள்ள இயலாத குழந்தைப்பருவத்தில் தேர்வு, அதில் தேர்ச்சியில்லை என்றால் உடனடித் தேர்வு, அதிலும் தேர்ச்சியில்லை என்றால் அதே வகுப்பில் மீண்டும் பயின்றாக வேண்டும் என்பது குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறை. தவிரவும் சமமான கற்றல், கற்பித்தல் சூழல் இல்லாத நிலையில் மாணவர்களின் இடைநிற்றல் பெருகும். இந்த எதிர்மறை விளைவுகளை உணர்ந்த பல்வேறு தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்பு வரவே “இன்னும் முடிவாகவில்லை, இந்த ஆண்டு பொதுத்தேர்வு நடக்காது” எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பின்வாங்கியிருக்கிறார். தேர்தல் நேரத்தில் சூழ்நிலையைச் சமாளிக்க இப்படி தற்காலிகமாக பின்வாங்கியுள்ள அமைச்சர் அடுத்த ஆண்டு பொதுத்தேர்வை திணிக்கக்கூடுமென்ற சந்தேகம் பரவலாக கிளம்பியுள்ளது. இதேபோன்று அப்போதைக்கு நெருக்கடியைச் சமாளிக்க எதையாவது சொல்லிக்கொண்டிருந்துவிட்டு கடைசிநேரத்தில் நீட் தேர்வை எழுதியாகும்படியான கட்டாயத்திற்குள் தமிழக மாணவர்களை தமிழக அரசும் மத்திய அரசும் தள்ளிவிட்டதை நாம் மறந்துவிட வேண்டியதில்லை.
தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத்தேர்வு இருக்காது, 8ஆம் வகுப்பு வரை இடைநிற்றல் இல்லாத தேர்ச்சிமுறை தொடரும் என்ற அறிவிப்பினை தமிழக அரசு வெளியிடவேண்டும். அதன் பொருட்டான தொடர் இயக்கங்களுக்கு வலுவேற்றும் விதமாக தனது பங்களிப்பினை தமுஎகச நல்கும்.
சு. வெங்கடேசன், மாநிலத்தலைவர் ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்