அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை இளங்கலை பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நூல் நீக்கத்திற்குக் கண்டனம்
மாநிலத்தலைவர்சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன்தீட்சண்யாவெளியிட்டுள்ளஅறிக்கை
தமிழக அரசால் இயக்கப்படுகிற காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்திலும் அதனுடன் இணைந்த கல்லூரிகளிலும் இளங்கலை தமிழ்த்துறைப் பாடநூல்களில் ஒன்றாக ஏற்கப்பட்ட, திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவியதலைவர், மறைந்த முதலமைச்சர் அண்ணா எழுதிய ‘நீதிதேவன்மயக்கம்’ நாடகம் கடந்த நவம்பர் 9 வெள்ளியன்று நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவுமான அரு.ராமநாதன் எழுதிய ராஜராஜசோழன் பற்றிய நூல் சேர்க்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டக்குழு அளித்த பரிந்துரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இந்தப் பல்கலைக்கழகத்தின் கல்லூரி மேம்பாட்டுத்துறைத் தலைவர் எஸ்.ராஜமோகன் தெரிவித்திருக்கிறார். இந்த நாடகத்திற்கு விளக்கமளிக்கக்கூடிய வழிகாட்டல் நூல்கள் போதிய அளவுக்கு இல்லை என்றும், அவற்றை வாங்குவதற்கு மாணவர்கள் கூடுதலாகப் பணம் செலவிட வேண்டியிருக்கிறது என்றும் குழு கருதியதாக அவர் கூறியிருக்கிறார்.
ராஜராஜசோழன் குறித்தநூலுக்கு மட்டும் போதுமான வழிகாட்டல் நூல்கள் கிடைக்கின்றனவா? அப்படியே ஒரு குறிப்பிட்ட நூலுக்குப் போதிய வழி காட்டல் நூல்கள் இல்லையென்றால் அவற்றைக் கிடைக்கச் செய்வதுதான் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு. அதைவிடுத்து மூலநூலையே பாடத்திட்டத்திலிருந்து நீக்குவது திட்டமிட்டமுறையில் பகுத்தறிவுச் சிந்தனைகளை முடக்குகிற சூழ்ச்சிதான். இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு இதிகாசங்களில் உள்ள சமூகநீதிக்கு எதிரான, பகுத்தறிவுக்குப் புறம்பான கருத்துகள் பற்றி விமர்சிக்கிற நூல் இது.
மேலும், மேடைகளில் நாடகமாக நடிக்கப்பட்ட கதையின்படி, நீதிமன்ற விசாரணை வடிவில் இடம்பெற்ற உரையாடல்களே ஒருநூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. அந்தஉரையாடல்களுக்கு, குறிப்பாக முதுகலைக் கல்வித்தளத்திற்கு வந்துள்ள மாணவர்களைப் பொறுத்தவரையில், தனிவழிகாட்டல்கள் பெரியஅளவுக்குத் தேவையே இல்லை. மாணவர்கள் இதில் விமர்சிக்கப்படும் இராமாயண, மகாபாரதக்கதைகள், கருத்துகள் தொடர்பான பிறநூல்களைத் தேடிப்படிக்கிற முனைப்புதான் தூண்டிவிடப்படும். கல்விவளர்ச்சிக்கு அது அடிப்படையானது.
மிகமுக்கியமாக, பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட பாடநூல்களுக்கான குழுதான் அண்ணாவின் நூலைப் பரிந்துரைத்தது. அப்போது போதுமான வழிகாட்டல்நூல்கள் இல்லை என்பதோ, மாணவர்களுக்குக் கூடுதல் செலவாகும் என்பதோதெரியவில்லையா? 2017-18, 2018-19, 2019-20 ஆகிய மூன்று ஆண்டுகளுக்குத் திட்டமிட்டுவைக்கப்பட்ட இந்நாடகம், இளங்கலை பகுதி-1 தமிழ் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு நான்காம் பருவத்தில் வரும் டிசம்பர் 10 நடைமுறைக்கு வர இருந்தது. ஆனால், நடைமுறைக்கு வருவதற்கு முன்பே அவசரமாக நீக்கப்பட்டிருக்கிறது.
பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்தமுடிவு, நாடு முழுவதுமே நடைபெறுகிற பிற்போக்குசக்திகளது ஊடுறுவலின்நீட்சிதான், மதவெறிக் கும்பல்களின் நோக்கத்திற்கு ஏற்பப் பாடத்திட்டங்களில் செய்யப்படுகிற திரிப்புகளின் தொடர்ச்சிதான் என்றால் மிகையல்ல. உயர்கல்வி நிறுவன வளாகங்களின் சமுதாய, அரசியல் அக்கறைகளுடன் மாணவர்கள் செயல்பட விடுவதில்லை என்ற போக்கின் பிரதிபலிப்புமாகும்.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ள தமிழறிஞர்களோடும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்களோடும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. நிர்வாக நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, அண்ணா என்ற அடையாளத்தைத் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துள்ள அதிமுக ஆட்சியாளர்கள், இத்தகைய அத்துமீறல்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதையும் கண்டிக்கிறது. பல்கலைக்கழகம் உடனடியாகத் தனது முடிவை மாற்றிக் கொண்டு ‘நீதிதேவன்மயக்கம்’ நாடக நூலை மறுபடியும் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்றும், தமிழகஅரசின் உயர்கல்வித்துறை அமைச்சகம் இதில் உடனடியாகத் தலையிட்டு இந்த முடிவைக் கைவிடச் செய்ய வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது. தமிழகத்தின் கல்விஉரிமை இயக்கங்கள், பண்பாட்டு அமைப்புகள் தங்களுடைய எதிர்ப்பை வலுவாகப் பதிவு செய்யவும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.