10 Oct 2018

நக்கீரன் கோபால் கைதுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளதை வரவேற்றும் மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தமுஎகச அறிக்கை

நக்கீரன் கோபால் கைதுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளதை  வரவேற்றும் மனோன்மணியம் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும் தமுஎகச சார்பில் மாநிலத்தலைவர் சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் விடுத்துள்ள  அறிக்கை:

நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபாலும் அதன் ஊழியர்கள் 31 பேரும் விநியோகஸ்தர்கள் மூவரும் ஆளுநர் அலுவலகத்தை பணி செய்யவிடாமல் தடுத்ததாக குற்றம்சாட்டி அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124படி நடவடிக்கை எடுக்கும்படி ஆளுநரின் துணைச்செயலாளர் ஒரு புகார் கொடுக்கிறார்.  புகார்தாரரே குற்றம்சாட்டப்படுகிறவர் மீது என்ன பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று சொல்கிறார், காவல்துறையும் அதை ஏற்றுக்கொண்டு நக்கீரன் கோபாலை விமான நிலையத்தில் வைத்து கைது செய்திருக்கிறது.

நிர்மலா தேவி மூலம் பல்கலைக்கழக மாணவியர் பாலியல் முறைகேடுகளுக்கு பயன்படுத்தப் பட்டதில் ஆளுநர் மாளிகைக்கு உள்ள பங்கு, இது தொடர்பில் நிர்மலா தேவியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் ஆகியவற்றை மையப்படுத்தி ஏப்ரலிலும் செப்டம்பரிலும் வெளியிடப்பட்ட செய்திக்கட்டுரைகள்  ஆளுநர் அலுவலகத்தின் பணிகளை செய்யவிடாமல் எவ்வகையில் தடுத்தது என்று விளக்கப்படவில்லை. இந்த குற்றச்சாட்டிற்கும் தமக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்து தமது நேர்மையை வெளிப்படுத்தியிருக்க வேண்டிய ஆளுநரும் அவரது அதிகாரிகளும், குற்றம்சாட்டிய பத்திரிகையாளர்களை கைது செய்து முடக்கும் இழிசெயலை மேற்கொண்டுள்ளனர்.

குடிமக்களின் கண்ணியமான வாழ்வுக்கு எங்கிருந்து யார்மூலம் அச்சுறுத்தல் வந்தாலும் அதை அம்பலப்படுத்துவது ஊடகத்தின் பொறுப்பு. இந்த ஜனநாயகக்கடமையை நிறைவேற்ற விடாமல் ஊடகங்களை தடுப்பதற்கு தமிழக ஆட்சியாளர்கள் மூலமாக ஆளுநர் அலுவலகம் முயற்சிக்கிறது என்பது நக்கீரன் கோபால் கைது விசயத்தில் அம்பலமாகியுள்ளது இந்நிலையில் கோபால் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாதென கூறி நீதிமன்றம் அவரை விடுவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதற்காக குரலெழுப்பிய அனவருடனும் தமுஎகச ஒருமைப்பாடு கொள்கிறது. ஒடுக்குதலுக்கு அஞ்சாமல் ஊடகப்பணியை முன்னெடுப்போம் என்கிற உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் ஊழியர்களை தமுஎகச பாராட்டுகிறது.

மாநில அரசை நடத்திச் செல்வதற்கு ஆளுநர் என்கிற பதவி எவ்வகையிலும் பயனற்றது என்பது ஒருபுறமிருக்க, அதிகார வரம்பை மீறுவது, பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாவது, ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்குவது ஆகிய காரணங்களினால் இப்போதுள்ள ஆளுநர் தமிழக மக்களின் நம்பிக்கையை முற்றாக இழந்து நிற்கிறார். ஆகவே அவர் திரும்பப்பெற வேண்டும் என்று எழும் கோரிக்கை நியாயமானதென தமுஎகச கருதுகிறது. 

***
கட்டண  உயர்வு ரத்து, தமிழில்  தேர்வெழுத அனுமதி, வருகைப்பதிவு  குறைவான  மாணவர்களுக்கு  விதிக்கப்பட்ட தண்டத்தொகை குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்திய  மாணவர்  சங்கம்  தலைமையில் மனோன்மணியம்  சுந்தரனார்  பல்கலைக்கழக  மாணவர்கள்   போராடி வருகின்றனர். பேச்சுவார்த்தையில் கட்டணக்குறைப்புக்கு ஒப்புக்கொண்ட பல்கலைக்கழகம்  தமிழில் தேர்வெழுதும் கோரிக்கையை  நிராகரித்துவிட்ட நிலையில்  தமிழில்  தேர்வெழுத  அனுமதி கோரி 09.10.18 அன்று வளாகத்திற்குள்  செல்ல  முயற்சித்த மாணவர்களை கடுமையாக தாக்கியுள்ளது காவல்துறை. மாணவிகள்மீது பெண்காவலர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கும் காணொலிக்காட்சிகள் இத்தாக்குதலின் கொடூரத்தை உணர்த்தவல்லவை.  இந்திய  மாணவர்  சங்கத்தின்  மாநிலத்தலைவர்  வீ. மாரியப்பன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட  மாணவ மாணவியர்க்கு பலத்த  காயத்தை ஏற்படுத்தியுள்ள காவல்துறை அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்துள்ளது. காவல் துறையின்  இந்த  ஜனநாயக  விரோத  அத்துமீறல்  நடவடிக்கையை  தமுஎகச வன்மையாக  கண்டிக்கிறது. 

தமிழில்  தேர்வெழுத  அனுமதி, மாணவர்கள்  மீது  புனைந்துள்ள  பொய்  வழக்குகள் ரத்து, காயமுற்றோருக்கு உரிய  சிகிச்சை, தாக்குதல்  நடத்திய  காவல்துறையினர்  மீது  சட்டரீதியான  நடவடிக்கை ஆகியவற்றை செயல்படுத்த வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கோருகிறது.

சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்                     ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்