26 Sept 2018

அரசுப்பள்ளிகளை மூடி, தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகளை அடைப்பதா? தமுஎகச கண்டனம்

அரசுப்பள்ளிகளை மூடி, தமிழ்வழிக் கல்விக்கான வாய்ப்புகளை அடைப்பதா?
தமுஎகச கண்டனம்


அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிரடியாக சரிந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் அரசுப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 கோடி என்றிருந்தது. அது, நான்காண்டுகளுக்கு முன் 56 லட்சமாகி, தற்போது 46 லட்சமாக குறைந்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மொத்த பள்ளிகளின் எண்ணிக்கை 21, 378. இவற்றில் 75 சதமானவை, 15 முதல் 100 மாணவர்கள் மட்டுமே உள்ள பள்ளிகள். நான்கு அரசுப்பள்ளிகளில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். 900 அரசுப்பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்களே பயில்கின்றனர். ஆனால் அதே நேரம் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி அதிகரித்து வருகிறது. தற்போது 15,000 தனியார் மெட்ரிக் பள்ளிகள் இயங்குகின்றன.  

போதிய நிதியின்மையால் குடிநீர், கழிப்பிடம், போதுமான இடத்துடன் கூடிய வகுப்பறை, தேவையான ஆசிரியர் போன்ற அடிப்படை கட்டுமானங்கள்கூட இல்லாதிருக்கின்றன. இந்த அவல நிலையை சரிசெய்வதற்கு போதிய நிதி, உள்கட்டமைப்புகள், ஆசிரியர் நியமனம் உள்ளிட்டவைகளை வழங்குவதற்கு மாறாக இப்பள்ளிகளை படிப்படியாக மூடிவிடுவது அல்லது அருகமை பள்ளிகளோடு இணைத்து ஒருங்கிணைந்த பள்ளிகளாக மாற்றிவிடுவது என்கிற நிலையை மத்திய நிதி ஆயோக் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 3 லட்சம் தொடக்கப்பள்ளிகள் மூடப்படும். குழந்தைகள் தமது வாழ்விடத்திற்கு அருகிலேயே கல்வி கற்கும் வாய்ப்பு பறிபோய்விடுவதுடன், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி படிக்கவேண்டிய நிலைமைக்கும் தள்ளப்படுவார்கள்.

மத்திய அரசின் இந்த முடிவினை ஏற்று வரும் ஆண்டிலிருந்து 15 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை மூடப்படும் அல்லது மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் என தமிழக கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளதாக செய்தி வருகிறது. இதன்படி சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் மூடப்படும். அடுத்தக்கட்டமாக தொடக்கப்பள்ளி இயக்குநரகத்தை படிப்படியாக கலைத்துவிட்டு பள்ளிக் கல்வித்துறையுடன் இணைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் எதிர்காலத்தில் தொடக்க கல்வி கடும் பாதிப்புக்குள்ளாகும்.

அண்டை மாநிலமான கேரளாவில், அரசுப்பள்ளிகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து அந்தப் பள்ளிகளில் நவீன கட்டமைப்புகளை உருவாக்கி கற்கும் சூழலை மேம்படுத்தி, தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப்பள்ளிகளுக்கு மாணவர்கள் வந்து சேரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திலோ அரசுப்பள்ளிகளை நலியவிட்டு, அரசுப் பள்ளிகளை மூடி தமிழ்வழிக் கல்விக்கான ஒட்டுமொத்தப் பாதைகளையும் அடைக்கும் நிலை உருவாகியுள்ளது. அரசுப் பள்ளிக்கல்வி முறையை அழித்தொழிப்பது, சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கான கல்வி வாய்ப்புகளை முற்றாக மறுதலித்து, அவர்கள் மீது கல்விக்கான பொருளாதாரச்சுமையை மேலும் சுமத்துவதாகும். தனியார் கல்விக் கொள்ளை வளையத்துக்குள் அடித்தட்டு மக்களையும் தள்ளிவிடும் சதிச்செயலாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது.

ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியதற்குச் சமமான இப்போக்கிற்கு எதிராக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கலை இலக்கியவாதிகள் உள்ளிட்ட அனைவரும் குரலெழுப்ப வேண்டுமாய் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் அறைகூவல் விடுக்கிறது. மேலும் போதிய நிதி ஒதுக்கி நவீன கட்டமைப்புகளை உருவாக்கி கற்கும் சூழலை மேம்படுத்தி அரசுப்பள்ளிகளை வலுப்படுத்த வேண்டுமென தமிழக அரசை தமுஎகச கேட்டுக்கொள்கிறது.


சு.வெங்கடேசன், மாநிலத்தலைவர்                          ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர்