திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் முதல்வரும் பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர் என பன்முக ஆற்றல் கொண்ட ஆளுமையுமான கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவுக்கு தமுஎகச நெஞ்சார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறது.
பழந்தமிழ் இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை, மொழியுரிமை காக்க களமாடிய போர்க்குணம், ஆரியமயமாக்கலுக்கு எதிரான திராவிடக் கருத்தியலில் பற்றுறுதி, கட்சியின் தலைவர் - ஆட்சியின் தலைவர்- எதிர்க்கட்சித் தலைவர் என தமிழக சட்டமன்றச் செயல்பாடுகளில் தொடர் பங்கெடுப்பு, மாநில உரிமைகளையும் தனித்துவங்களையும் காப்பதற்கான உறுதிப்பாடு, இந்திய அரசியல் போக்குகளைத் தீர்மானிக்கும் குறிப்பிடத்தக்க சக்தி - என முக்கால் நூற்றாண்டு கால தமிழக வரலாற்றை தனது பெருமைமிக்க பங்களிப்புகளால் நிறைத்திருக்கிறார் கலைஞர் மு.கருணாநிதி.
மனுநீதியின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காத்திட சமூகநீதி, பெண்களுக்குச் சொத்துரிமை, அரசுப்பணிகளில் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு, மாறிய பாலினத்தவருக்கென தனி வாரியம், அருந்ததியர் உள்ஒதுக்கீடு, அனைத்துச்சாதியினரையும் அர்ச்சராக்குதல், மாவட்டம் தோறும் அரசு மருத்துவக்கல்லூரிகள், பேருந்து தேசியமயம் ஆகியவற்றுக்காக தனது அரசியலதிகாரத்தை பயன்படுத்தியமைக்காகவும் அவர் நினைவுகூரப்பட வேண்டியவராக இருக்கிறார்.
சர்வதேச மதிப்பிற்குரிய பாங்கில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியவர். தமிழின் செம்மொழித் தொன்மைக்கு உரியதான அங்கீகாரம் பெறுவதில் முன்னணியில் இயங்கியவர். நாடகம், திரைத்துறை, பத்திரிகை மற்றும் எழுத்திலக்கியத்தில் முனைப்புடன் செயல்பட்டவர். இடையறாத படிப்பாளி, ஈர்க்கும் விதமான பேச்சாளி. தலையை சீவிவிடுவோம் என்று மதவெறியர்கள் அச்சறுத்திய போதும் பணியாது மூடநம்பிக்கைகளை கடுமையாக விமர்சித்தவர் என நிறைவாழ்வு வாழ்ந்தவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
முன்னெப்போதும் கண்டிராத வகையில் நாடெங்கும் ஆக்கிரமித்துவரும் மதவெறியையும் எதேச்சதிகாரத்தையும் பார்ப்பனீயக் கருத்தியலையும் தடுப்பதற்கான வழிகாட்டுதலை தனது நெடிய அரசியல் அனுபவங்களின் வெளிச்சத்தில் தரவேண்டிய இக்காலத்தில் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமாகியிருக்கிறார். அவரது மறைவிற்கான யாவருடைய துக்கத்திலும் தமுஎகச பங்கெடுக்கிறது. அவர் இருந்திருந்தால் ஆற்றியிருக்கக்கூடிய சமூக அரசியற்பணிகளை தொய்வின்றி நிறைவேற்ற அவரது கட்சியும் தொண்டர்களும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமுஎகச உடன் நிற்கும்.
சு.வெங்கடேசன்,
மாநிலத்தலைவர்
ஆதவன் தீட்சண்யா
பொதுச்செயலாளர்